சித்திரை திருவிழா.. வைகையில் இறங்கும் கள்ளழகர்.. 2400 பேருக்கு மட்டுமே அனுமதி.... ஹைகோர்ட் உத்தரவு
அழகர் மீது தூய்மையான தண்ணீரை மட்டுமே பீய்ச்சி அடிக்க வேண்டும் என்றும் உத்தரவு
அழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்திற்கு வைகை ஆற்றுக்குள் 2,400 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கும்போது தூய்மையான தண்ணீரை மட்டுமே பீய்ச்சி அடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் ஆண்டுதோறும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிக விசேஷமானது. இதில் பங்கேற்க அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரை முழுவதும் சுற்றி, மக்களின் மரியாதைகளை ஏற்றுக் கொண்டு வரும் நிலையில், மதுரை மட்டுமின்றி அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள மக்களும் பல்லாயிரக் கணக்கில் வருகை தருவது வழக்கம். அப்போது வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பார்கள். மேலும் ஆற்றில் ஏராளமான மக்கள் இறங்கி, வழிபாடு செய்வார்கள்.
இந்த ஆண்டு அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, சித்திரை திருவிழாவின் போது போதுமான அளவு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், மொபைல் மருத்துவ சேவைகளை வழங்கவும் உத்தரவிட வேண்டும். குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்து தரப்படுவதையும் உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பொதுநல மனுவை சிவகங்கையைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட இருவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை, நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வு விசாரித்தது. அப்போது, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ள இடம் சிறியது என்பதால் கோவில் நிர்வாகம் தரப்பில் வழங்கப்பட்டிருக்கும் 2000 பாஸ்கள் மற்றும் 400 பேட்ச் அணிந்தவர்கள் என மொத்தம் 2400 பேர் மட்டுமே வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், கள்ளழகரின் மீது நீர் பீய்ச்சுவதை பக்தர்கள் நேர்த்தி கடனாக செலுத்தும் நிலையில், பாரம்பரிய முறையில் தோற்பையில் கைகளால் உருவாக்கப்படும் விசையை பயன்படுத்தி, சுத்தமான நீரை மட்டுமே பீய்ச்சி அடித்து வழிபட வேண்டும் என்றும், மீறுவோர் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
What's Your Reaction?