ஓட்டு போட அழைத்த தாசில்தார்.. புறக்கணித்த பரந்தூர் கிராம மக்கள்.. 10 பேர் மீது வழக்கு !
பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள ஏகனாபுரம் கிராம மக்கள், மக்களவை தேர்தலை புறக்கணித்துள்ளனர். தாசில்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 10பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் மிகப்பெரிய மக்கள் பயன்பாட்டை தாக்குப்பிடிக்காது என கருதிய தமிழக அரசு, சென்னையின் 2வது விமானநிலையத்தை அமைக்க திட்டமிட்டது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரைச் சுற்றியுள்ள 20 கிராமங்களில் உள்ள 5,700 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி விமானநிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அந்த கிராமங்களில் உள்ள 1500க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் நிலம் கையகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோது, அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், போராட்டத்திலும் குதித்தனர்.
இந்நிலையில், விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 ஆண்டுகளுக்கு மேலாக ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளையில் பரந்தூரில் உள்ள கிராமங்களுக்கு ஓட்டு கேட்க போனால், மக்கள் கடும் எதிர்வினையாற்றுவார்கள் என கருதிய கட்சியினர். தேர்தல் சமயத்தில் பல கிராமங்களுக்கு தேர்தல் பிரசாரத்திற்கு கூட செல்லாமல் தவிர்த்து விட்டனர்.
இதனிடையே கடந்த ஏப்ரல் 19 அன்று நடந்த மக்களவை தேர்தலை ஏகானாபுரம் கிராம மக்கள் முழுவதுமாக புறக்கணித்தனர். அப்போது தாசில்தார் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று மக்களை வாக்களிக்க அழைத்தனர். அப்போது தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வாக்களிக்க மாட்டோம் என உறுதிபட கூறினர். இதனால் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 10பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வட்டாட்சியர் கொடுத்த புகாரின் பெயரில் சுப்பிரமணியன், கதிரேசன், கணபதி, பலராமன் , முனுசாமி, இளங்கோவன், கவாஸ்கர், சுதாகர், ஓம் பகவதி, விவேகானந்தன் ஆகிய 10 பேர் மீது சுங்குவார்சத்திரம் போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
What's Your Reaction?