தேர்தல் திருவிழா 2024 ... பரபரப்பான வாக்குச்சாவடிகள்.. ஓர் சுவாரஸ்ய தொகுப்பு!
1. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மாணகிரியில் லட்சுமி அருணாச்சலம் செட்டியார் நடுநிலைப் பள்ளியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், தன் மனைவி ஸ்ரீநிதி, மகள் அதித்தி ஆகியோருடன் வந்து வாக்கு செலுத்தினார். அப்போது அந்த வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் மாற்றி வைக்கப்பட்டதாக கூறி தேர்தல் அதிகாரியுடன் கார்த்தி சிதம்பரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பின்பு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வாக்கு பெட்டி மாற்றி வைக்கப்பட்டது குறித்து தொலைபேசியில் புகார் அளித்ததால் அந்த வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.
2. புதுச்சேரியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சித் துண்டுடன் வாக்கு மையத்திற்குள் வாக்களிக்கச் சென்றதால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தூத்துக்குடி அருகே தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட பொட்டலூரணி கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காரை விட்டு இறங்கவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் விரட்டி அடித்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
4. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உப்புக்கோட்டை கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 133 மற்றும் 136-ல் காலை முதலே பொதுமக்கள் வாக்களித்து வந்தனர். இந்த நிலையில் இதே பகுதியைச் சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்டோர் வாக்கு செலுத்த வந்த நிலையில், பட்டியலில் அவர்கள் பெயர் இல்லை எனத் தெரிவித்ததால் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதத்ல் ஈடுபட்டனர்.
5. கோவை பி.என்.புதூர் வாக்குச்சாவடி அருகே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பூத் ஸ்லிப் வழங்ம்போது, சின்னம் மற்றும் கொடியுடன் இங்கு இருக்கக்கூடாது என்று கண்டித்த உதவி ஆணையரை, திமுக நிர்வாகி ஒருவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் அந்த நபரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று, காவல் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
6. சென்னை எம்.கே.வி நகர் 150-ஆவது வாக்குப்பதிவு மையத்தில் அதிமுகவுக்கு ஓட்டளித்தாலும், மீதமுள்ள எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் அத்தனை ஓட்டுகளும் பிஜேபிக்கு செல்வதாக வாக்களிக்க வந்த வாக்காளர் ஜெயக்குமார் என்பவர் கூறினார். இதனையடுத்து அப்பகுதியை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7. திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி மையத்தில், மின்னணு இயந்திரத்தின் கவர் பெட்டி மீது உள்ளாடையை காய வைத்திருந்தது ஓட்டு போட வந்த வாக்காளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
8. அரியலூர் மாவட்டம் நரசிங்கபாளையம் கிராம வாக்குச்சாவடி அருகே பாஜக, விசிக கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது.
9. மயிலாடுதுறை அருகே திருவிளையாட்டம் வாக்குச்சாவடிக்கு திமுக கிளைச்செயலாளாரர் தனது வயது முதிர்ந்த உறவினரை ஓட்டு போட அழைத்து வந்துள்ளார். அதனை ஏற்காத அதிமுகவை சேர்ந்த 3 பேர் வாக்குச்சாவடியின் மைய வாசலிலேயே திமுக பிரமுகரை தாக்கினர். வாக்குச்சாவடி முன்பு திமுக பிரமுகரை அதிமுகவினர் தாக்கியதால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டதுடன், அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலைமறியல் போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர். இதனால் பாதிப்படைந்த வாக்குப்பதிவு அரை மணி நேரம் கழித்து மீண்டும் தொடங்கியது.
10. வாணியம்பாடியில் கடைசி நேரத்தில் வாக்களிக்க வந்த வசீம் என்பவருக்கு டோக்கன் வழங்காததால், வாக்குச்சாவடி அலுவலர்களுடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் வாக்குச்சாவடி அலுவலர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர், அந்த நபருக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.
11. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த மையத்தில் உயிரிழந்த மணிகண்டன் என்பவரின் வாக்கு பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டது. இறந்த ஒருவரின் வாக்கு பதிவானதையடுத்து வாக்குப்பதிவை நிறுத்த கோரி பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு வாக்குச்சாவடி மைய வளாகத்தில் கட்சிக்காரர்களுடன் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் வாக்குப்பதிவு மையத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?