போலி நிறுவனம்.. திருச்சி வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி... சிபிஐ  பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு

Apr 12, 2024 - 16:36
போலி நிறுவனம்.. திருச்சி வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி... சிபிஐ  பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு

திருச்சி கனரா வங்கியில் போலி ஆவணங்களைக் காட்டி லோன் மூலமாக பல கோடிகள் மோசடி செய்த தம்பதிக்கு எதிராக சாட்சிக் கையெழுத்து போட்ட நபர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த தனபாலன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த 2015-ல் கலா என்பவர் தொழில் தொடங்குவதாகக் கூறி திருச்சி துவாக்குடியில் உள்ள கனரா வங்கிக்கிளையை அணுகினார். அவருக்கு 1.85 கோடி ரூபாய் லோன் வழங்கப்பட்டது. கடன் தொடர்பான விவரங்கள் எதையும் என்னிடம் தெரிவிக்காமல் என்னை சாட்சியாக கையெழுத்திடச் சொல்லி அவரும், வங்கி ஊழியர்களும் கூறினர். அதன் காரணமாக நானும் கையெழுத்துட்டேன். பின்னர் அது தொடர்பான விவரங்களை விசாரித்த போது, மனுதாரர் S.B இன்ஜினியரிங் எனும் கம்பெனியின் நிறுவனராக தன்னை காண்பித்து வங்கி கடன் பெற்றது தெரிய வந்தது. ஆனால், அந்நிறுவனம் அவருடையதல்ல. அவர் போலியான சான்றிதழ்களை சமர்ப்பித்து வங்கியில் கடன் பெற்று, துவாக்குடி பகுதியில் நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலமும் இதுவரை முறையாக பத்திரப்பதிவு செய்யப்படவில்லை.

கடந்த 2015 மார்ச் 30 ஆம் தேதி லோனுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு, அன்றைய தினமே வங்கிக் கணக்கும் தொடங்கப்பட்டு, கடன் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த 2014-ல் பாரி என்பவர் கனரா வங்கியில் 11 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதற்கு சாட்சியாக தற்போது கடன் வாங்கிய கலா என்பவர் கையெழுத்திட்டுள்ளார். இவர் பாரியின் மனைவி ஆவார்.

மேலும், கடன் வாங்கி மோசடி செய்யவதற்க்கு ஏதுவாக கலா பெயரில்  இரண்டு வருமானவரி எண் (pan card) வெவ்வேறு பிறந்த தேதிகளை வைத்து பெற்றுள்ளார். வங்கிக் கடன் பெற்ற விவகாரம் இவரது CIBIL பதிவில் ஏறவில்லை, ஆனால் சாட்சி கையெழுத்துப் போட்ட எனது பெயரில் உள்ள PAN மற்றும் CIBIL பதிவில் இரண்டு கோடி கடன் வாங்கியதாகத் தெரிகிறது. இதில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று உள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக வங்கிக் கடன் வசூல் தீர்ப்பாயம் விசாரணைக்கு வந்த போது கனரா வங்கி தரப்பில் மோசடி ஏதும் நடைபெறவில்லை என மோசடி செய்தவர்களுக்கு சாதகமாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பது என தெரியவருகிறது. ஆகவே எனது புகார் தொடர்பாக சிபிஐ விசாரித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கனரா வங்கியில் நடைபெற்ற முறைகேடு குறித்து வங்கியின் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வங்கியையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து நீதிபதி, சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு அடுத்த விசாரணையில் கனரா வங்கியை எதிர்மனுதாரராக சேர்ப்பது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறிய வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow