வைகையில் கலக்கும் மருத்துவக் கழிவு நீர்.. மதுரை கலெக்டருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

Apr 30, 2024 - 17:53
வைகையில் கலக்கும் மருத்துவக் கழிவு நீர்.. மதுரை கலெக்டருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுநீர், வைகை ஆற்றில் கலப்பதை தடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வைகை நதிகள் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் வைகை ராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் வரை செல்கிறது. இந்த மாவட்டங்களில் விவசாயத்திற்கும் வைகை ஆற்று நீர் பெரிதும் பயன்படுகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் வைகை நீர் குடிநீர் ஆதாரமாக உள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு புறநோயாளிகள் 6,000 பேரும், உள்நோயாளிகளாக 3,500 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் அங்கு பல்வேறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட உயர்தர மருத்துவமும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேறக்கூடிய ரசாயனம் கலந்த மருத்துவக் கழிவுநீரை எந்தவிதமான சுத்திகரிப்பு செய்யாமல் ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் நேரடியாக குழாய் மூலம் கலக்கப்படுகிறது.

இதனால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் தொற்று நோய்கள் பரவவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கழிவை, குழாய் மூலம் வைகை ஆற்றில் கலக்கப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக பொதுப்பணித்துறை செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow