வெளிநாடுவாழ் தமிழ் இளைஞர்களுக்கு நெல்லையப்பர் கோவிலில் மேளதாளம் முழங்க வரவேற்பு 

தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வீர விளையாட்டுகள் தொடர்பாகவும் எங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது

Jan 4, 2024 - 16:41
Jan 4, 2024 - 22:18
வெளிநாடுவாழ் தமிழ் இளைஞர்களுக்கு நெல்லையப்பர் கோவிலில் மேளதாளம் முழங்க வரவேற்பு 

தமிழக அரசின் வேர்களை தேடித் திட்டத்தின் மூலம் தமிழகம் வந்த வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் பூர்வ குடிகளின் குழந்தைகளுக்கு நெல்லை நெல்லையப்பர் கோவிலில் மேளதாளம் முழங்க பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தமிழகத்தை பூர்வீகமாகக்கொண்டு வெளிநாடுகளில் குடியேறிய குழந்தைகளுக்கும், வெளிநாட்டைச் சேர்ந்த தமிழர்களும் தமிழகத்தின் பாரம்பரியம் பண்பாடு மரபுகளை தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட வேர்களை தேடி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா, பிஜூ தீவுகள், கன்னடா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 58 பேர் கொண்ட முதல் குழு கடந்த 15ஆம் தேதி தமிழக வந்தடைந்தது. 

அங்கிருந்து மகாபலிபுரம், ராமேஸ்வரம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நகரங்களுக்கு சென்று தமிழகத்தின் பாரம்பரியம் பண்பாடு, உணவு பழக்க வழக்கம் கலாச்சாரம் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ளும் வகையில் அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற 58 பேர் கொண்ட தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அயல்நாட்டு தமிழ் மாணவர்கள் குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் உள்ளிட்டவைகளை பார்த்துவிட்டு நெல்லையப்பர் கோவிலுக்கு வருகை தந்தனர். 

அங்கு தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நெல்லையப்பர் கோவில் ஊழியர்கள் 58 பேரையும் காந்திமதி அம்பாள் சன்னதி, ஆயிரம் கால் மண்டபம்,  கோவில் பிரகாரத்தில் உள்ள கலைநயம் குறித்து விளக்கப்பட்டது.

சுவாமி நெல்லையப்பர் சன்னதி, தாமிர சபா மண்டபம் உள்ளிட்டவைகளுக்கு அழைத்துச் சென்று பார்வையிட செய்ததுடன் அவர்களுக்கு சிலைகள் குறித்தான விளக்கங்களையும் பூஜை முறைகள் குறித்தான விளக்கங்களையும் அளித்தனர்.

தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளை தரிசனம் செய்த அவர்கள் கோவிலில் விளக்கேற்றி வழிபாடும் மேற்கொண்டனர். தொடர்ந்து நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் மணிமண்டபத்திற்கு சென்று பார்வையிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாற்றை கேட்டறிந்தனர்.

 இதுகுறித்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாணவி சுபஸ்ரீ கூறுகையில், "தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு சார்பில் அரசின் செலவில் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகளை வேர்களை தேடி என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வந்து பல்வேறு பகுதிகளை பார்வையிட ஏற்பாடு செய்தவுடன் பாரம்பரியம், கலாச்சாரம் குறித்து விளக்கங்களும் எங்களுக்கு தெரியும் வகையில் ஏற்பாடு செய்தனர்.

 அரசு சார்பில் வாகனம் ஏற்பாடு செய்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவைகளை கண்டறிந்துள்ளோம். நெல்லை நெல்லையப்பர் கோவிலுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டில் இதுபோன்று பெரிய கோவில்களை பார்க்க முடியாது. நாங்கள் இதைப்பார்த்து பிரம்மிப்படைந்துள்ளோம் உள்ளோம். 

தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வீர விளையாட்டுகள் தொடர்பாகவும் எங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழ் கலாச்சாரத்தை நாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு எடுத்துச்சென்று தெரிவிக்க இருக்கிறோம்” என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow