தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் -கண்ணீர்க் கடலில் தொண்டர்கள்

தமிழக அரசு சார்பில் முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Dec 28, 2023 - 15:59
Dec 28, 2023 - 18:13
தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் -கண்ணீர்க் கடலில் தொண்டர்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த்(71)உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 6.10 அவரது உயிர் பிரிந்தது. 

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. விஜயகாந்த் மறைவிற்கு பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், கனிமொழி எம்.பி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர்கள், நடிகைகள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள  விஜயகாந்த் வீட்டிற்கு இன்று காலை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிற்கு ஆறுதல் கூறினார். முதலமைச்சருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

பின்னர் விஜயகாந்த் உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு மக்கள் கடலில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக 3 கி.மீ தூரத்தை கடந்து கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.இன்றும் நாளையும் பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் கவுண்டமணி, மன்சூர் அலிகான், டி.ராஜேந்தர், ராமதாஸ் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு ஊர்களில் இருந்து தேமுதிக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளதால் கோயம்பேட்டில் கடல் அலைப்போல் மக்கள் அலை காணப்படுகிறது.

விஜயகாந்தின் உடல் நாளை மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள இடத்தில் அடக்கம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடலுக்கு தமிழக அரசு சார்பில் முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்த வந்துக்கொண்டே இருப்பதால் கோயம்பேட்டில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow