நடவடிக்கை எடுக்க வந்த அதிகாரிகளை தடுத்து வாடகை செலுத்தாத கோவில் கடைக்காரர்கள் போராட்டம்

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரும் ஜனவரி 25ம்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது

நடவடிக்கை எடுக்க வந்த அதிகாரிகளை தடுத்து  வாடகை செலுத்தாத கோவில் கடைக்காரர்கள் போராட்டம்

மயிலாடுதுறையில் வாடகை செலுத்தாத கோவில் கடைகளுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை காந்திஜி சாலையில் திரெளபதி அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தனியார் பரம்பரை அறங்காவலர் நிர்வாகத்தில் உள்ளது.இந்த கோவிலுக்கு சொந்தமான சில கடைகள் மூர்த்தி என்பவரது அனுபவத்தில் உள்ளது. இந்த கடைகளுக்கு உரிய வாடகை செலுத்தாததால் அறநிலையத்துறை இணை ஆணையர் உத்திரவுபடி நேற்று கடைகளை பூட்டி சீல் வைப்பதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வந்தனர்.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தலைவர் ராயர், நிர்வாகிகள் விஜய், ராமலிங்கம், துரைராஜ், மேகநாதன், உள்பட பலர் கடையை  பூட்டி சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து மயிலாடுதுறை டி.எஸ்.பி சஞ்சீவ்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திட அவர்களை உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், தாசில்தார் சபீதாதேவி, டி.எஸ்.பி சஞ்சீவ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அடிமனை வாடகைதாரர் சார்பில் மேற்படி ஆணையினை எதிர்த்து அறநிலையத்துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் ஒருமாத கால அவகாசம் வேண்டுமென்று கோரப்பட்டதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரும் ஜனவரி 25ம்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.இதனையடுத்து கடைகளின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow