Darshan: இளைஞர் கொலை வழக்கு... கன்னட ஹீரோ தர்ஷன் அதிரடி கைது... பகீர் கிளப்பும் தகவல்கள்!
பிரபல கன்னட ஹீரோ தர்ஷன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரு: கன்னட திரையுலகையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது நடிகர் தர்ஷனின் கைது விவகாரம். கன்னடத்தில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் தர்ஷன். காட்டேரா, ராபர்ட், எஜமானா, குருஷேத்ரா, சக்ரவர்த்தி உள்ளிட்ட படங்கள் தர்ஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளன. இப்போதும் டெவில் தி ஹீரோ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கொலை வழக்கு ஒன்றில் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சித்தூரைச் சேர்ந்த ரேணுகா சுவாமி என்ற இளைஞர், இரு தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பெங்களூருவில் உள்ள மெடிக்கலில் வேலை பார்த்து வந்த ரேணுகா சுவாமி, திடீரென கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ரேணுகா சுவாமியின் உடலை 3 மர்ம நபர்கள் கொண்டு வந்து வீசிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது இளைஞரின் கொலை விவகாரத்தில் பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதாவது உயிரிழந்த ரேணுகா சுவாமி, தர்ஷனின் தோழியான நடிகை பவித்ரா கவுடாவுக்கு மெசேஜ்கள் அனுப்பியதாகவும், அதில், தர்ஷன் பற்றி தவறான தகவல்கள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து தன்னைப் பற்றி தவறான தகவல்களை நடிகை பவித்ரா கவுடாவுக்கு செல்போனில் அனுப்பியதால், ரேணுகா சுவாமியை கொலை செய்ய தர்ஷன் ஏதும் திட்டமிட்டாரா எனவும் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மைசூரில் தனது பண்ணை வீட்டில் இருந்து தர்ஷனை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தர்ஷன் உட்பட மொத்தம் 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளதால், கன்னட திரையுலகில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ரேணுகாவின் கொலைக்கும் தர்ஷனுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர். இதன் முடிவில் திடுக்கிடும் திருப்பங்கள் இருக்குமா அல்லது தர்ஷன் தான் ரேணுகாவை கொலை செய்ய திட்டம் தீட்டினாரா என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?