‘மௌனம் பேசியதே’: ஜீ தமிழில் புதிய வரவு.. நேரம் மாறும் பழைய சீரியல்..
ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள நெடுந்தொடரான மௌனம் பேசியதே, பிற்பகல் 01 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழில் பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றாக ஜீ தமிழ் இருந்து வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளும், சீரியல்களும் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 2018ஆம் ஆண்டு ஜீ தமிழில் வெளியான ‘செம்பருத்தி’ சின்னத்திரை தொடர் டி.ஆர்.பி.யில் [Target rating point] முதலிடம் பிடித்தது.
அதே போன்று யாரடி நீ மோகினி, அழகிய தமிழ் மகள், ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி போன்ற தொடர்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. தொடர்ந்து வள்ளியின் வேலன், நெஞ்சத்தை கிள்ளாதே என புதுப்புது சீரியல்களை களத்தில் இறக்கியது.
இந்நிலையில் வரும் நவம்பர் 4ஆம் தேதி முதல் மௌனம் பேசியதே என்ற புத்தம் புதிய சீரியல் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அசோக், ஜோவிதா லிவிங்ஸ்டன், இரா அகர்வால், சத்யா உட்பட பலர் இந்த முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த சீரியலின் ப்ரோமோக்கள் தொடர்ந்து வெவ்வேறு விதமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
விருப்பத்துடன் ஒரு ஜோடிக்கும், விருப்பமில்லாமல் ஒரு ஜோடிக்கும் திருமணம் நடக்கிறது. இரண்டு ஜோடியும் ஒரு பேருந்தில் பயணம் செய்ய எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்தில் ஜோடி மாறி வாழ்க்கையில் ஒன்று சேர வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதனை தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையில் அடுத்து நடக்க போவது என்ன? அவர்கள் சந்திக்க போகும் சவால்கள் என்ன என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம்.
இந்த ‘மௌனம் பேசியதே’ சீரியல் மதியம் 1 மணிக்கு புதிதாக ஒளிபரப்பாக உள்ளது. இதனால், இதுவரை மதியம் 1 மணி முதல் 2 மணி வரை ஒளிப்பரப்பாகி வந்த இதயம் சீரியல், இனிமேல் 1:30 மணி முதல் 2:30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?