David Johnson: இந்தியாவின் ஷோயப் அக்தர்... யார் இந்த டேவிட் ஜான்சன்... மர்ம மரணத்தின் பின்னணி என்ன?

இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் ஜான்சன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, சூப்பர் 1 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியினர் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்

Jun 21, 2024 - 13:06
David Johnson: இந்தியாவின் ஷோயப் அக்தர்... யார் இந்த டேவிட் ஜான்சன்... மர்ம மரணத்தின் பின்னணி என்ன?

90களில், இந்திய அணிக்காக இரண்டு டெஸ்டுகளில் மட்டுமே விளையாடிய டேவிட் ஜான்சன், உலகின் அதிவேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். கர்நாடகாவை சேர்ந்த இவர், பெங்களூரில் அடுக்குமாடி கட்டடத்தில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து தவறி விழுந்து அகால மரணமடைந்தார்.  யார் இந்த டேவிட் ஜான்சன்?

இந்திய கிரிக்கெட் அணி காலம்காலமாகவே சுழற்பந்து வீச்சாளர்களின் சொர்க்க பூமியாக இருந்து வருகிறது. சுதந்திரத்திற்கு முன்பாக அமர்சிங், முகமது நிசார் போன்ற அதிவேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளனர். ஆனால், தேசப்பிரிவினைக்குப் பிறகு முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தானுக்கு சென்றதால், இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது;  இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வேகம் குறைவான ஆடுகளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததும் ஒரு காரணம். 1970களின் இறுதியில் கபில்தேவ், யோக்ராஜ் சிங் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள், இந்திய அணியின் முகத்தை மாற்றும் விதமாக வட இந்தியாவில் இருந்து கிளம்பி வந்தனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முழு முதல் வேகப்பந்து வீச்சாளர் என்று ஜவஹல் ஸ்ரீநாத்தையே சொல்ல முடியும். 90களில் கர்நாடக அணி அசைக்க முடியாத ஓர் உள்ளூர் அணியாகத் திகழ்ந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய அணியாக இருந்தாலும் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், தொத்தா கணேஷ் என்று ஒரு வலிமையான வேகப்பந்து வீச்சுப் படை அந்த அணிக்கு இருந்தது. இந்த மும்மூர்த்திகள் உடன் 1992-ல் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக வந்து சேர்ந்தார் டேவிட் ஜான்சன். உச்ச நட்சத்திரங்கள் இடம்பெற்ற அணி என்பதால், ஜான்சனுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 1995 ரஞ்சி தொடரில் அபாரமாக பந்துவீசிய ஜான்சன், 23 விக்கெட்டுகளை கைப்பற்றி கர்நாடக அணி கோப்பை வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார். 

உள்ளூர் கிரிக்கெட்டில் சாதித்ததைத் தொடர்ந்து, ஃபெரோஷா கோட்லாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். அறிமுக டெஸ்டில் மைக்கேல் ஸ்லாட்டரின் விக்கெட்டை கைப்பற்றி, கிரிக்கெட் உலகின் கவனத்தைத் திருப்பிய ஜான்சனுக்கு, தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இடம் கிடைத்தது. டர்பன், கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டில் விளையாடிய டேவிட் ஜான்சன், 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜான்சனின் அதிவேகப்பந்து வீச்சு, எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினாலும், லைன் & லெங்தில் கட்டுப்பாடு இல்லாததால், இந்திய அணியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தேசிய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், கர்நாடக அணிக்காக முதல் தரக் கிரிக்கெட்டில் தொடர்ந்து பங்களித்தார். 39 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் ஜான்சன், 125 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசியாக கர்நாடகா பிரீமியர் லீக் போட்டிகளில் 2009-ல் விளையாடிய அவர், ஓய்வுக்குப் பின்னர் இந்திய அணியின் மேட்ச் அஃபீசியல் குழுவில் பணியாற்றினார். 2015-ல் மீண்டும் கர்நாடகா பிரிமீயர் லீக் போட்டிக்குத் திரும்பி வந்த அவர், 5 போட்டிகளில் விளையாடினார். சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், டேவிட் ஜான்சன் மதுப்பழக்கத்துக்கு அடிமையானார் என்று கூறப்படுகிறது. 

மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த ஜான்சன், வீட்டிற்குத் திரும்பிய சில நாட்களில் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இது தற்கொலையா என்ற கோணத்திலும் விசாரணையை முடிக்கிவிட்டுள்ளனர். டேவிட் ஜான்சனின் மரணத்துக்கு அனில் கும்ப்ளே, கௌதம் காம்பீர், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஷோயப் அக்தர், பிரெட் லீ ஆகியோருக்கு நிகராக சாதித்திருக்க வேண்டிய டேவிட் ஜான்சன், சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் மதுவுக்கு அடிமையாகி, 51 வயதில் மரணமடைந்திருக்கிறார். பெயரையும் புகழையும் அள்ளிக் கொடுக்கும் கிரிக்கெட்டுக்கு இருக்கும் இன்னொரு கோரமான முகத்தை வெளிப்படுத்தியுள்ளது இந்த மரணம்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow