'அதிமுகவினர் திட்டமிட்டு நாடகம்... ஒருபோதும் அனுமதிக்க முடியாது' - முதல்வர் ஸ்டாலின்
அதிமுகவினர் திட்டமிட்டு மரபுகளுக்கு மாறாக அவையில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்தனர். அவையின் விதிகள், மரபுகளுக்கு மாறாக நடந்து கொண்டுள்ளனர். ஜனநாயக முறையில் சட்டப்பேரவை நடைபெற வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். ஆனால் அதைமீறி அதிமுகவினர் செயல்பட்டனர்.
சென்னை: சட்டப்பேரவையில் அதிமுகவினர் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் துக்கம் அனுசரிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்து வந்திருந்த அதிமுக, பாமக உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியவுடன் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு, ''கேள்வி நேரம் முடிந்தவுடன் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி வழங்கப்படும்' என்று கூறினார். ஆனால் இதை ஏற்க மறுத்த அதிமுக, பாஜக, பாமக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
'அமைதியாக உட்காருங்கள்' என்று அப்பாவு அவர்களிடம் கூறியபோதிலும், எதிர்க்கட்சியினர் அரசை கண்டிக்கும் பதாகையை கையில் ஏந்தி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சபாநாயகர் உத்தரவின்பேரில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அதிலும் அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமாரை அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி சென்று அவையில் இருந்து வெளியேற்றினார்கள். அதிமுகவினர் வெளியேற்றப்பட்டது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, ''கள்ளக்குறிச்சி மரணம் தொடர்பாக கேள்வி நேரம் முடிந்து, கவனஈர்ப்பு தீர்மானத்தின்போது அனைத்து உறுப்பினர்களும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்கலாம்.
ஆனால் இதை ஏற்காமல் அவையின் மாண்பை குறைக்கும் வகையில் நடந்து கொண்டதால் அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்'' என்றார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சட்டப்பேரவையில் பங்கேற்க தடை விதித்தும் சபாநாயகர் உத்தரவிட்டார்.
மேலும், ''சட்டப்பேரவையில் கேள்வி நேரம் என்பது மிகவும் முக்கியமானது. கேள்வி முடிந்தபிறகே மற்ற பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும். சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் சரியல்ல'' என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் அதிமுகவின் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்று குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ''கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து தகவல் அறிந்ததும், உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளேன்.
ஆனால் அதிமுகவினர் திட்டமிட்டு மரபுகளுக்கு மாறாக அவையில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்தனர். அவையின் விதிகள், மரபுகளுக்கு மாறாக நடந்து கொண்டுள்ளனர். ஜனநாயக முறையில் சட்டப்பேரவை நடைபெற வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். ஆனால் அதைமீறி அதிமுகவினர் செயல்பட்டனர்.
மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பிரதான எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும். ஆகவே எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவை நடவடிக்கையில் பங்கேற்க சபாநாயகர் அனுமதி வழங்க வேண்டும். அவர்கள் மீதான தடை உத்தரவை நீக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் பேசினார். பின்பு முதல்வரின் கோரிக்கையை ஏற்ற சபாநாயகர் அப்பாவு, அதிமுக உறுப்பினர்கள் மீதான தடையை நீக்கி, அவர்களை அவைக்குள் அனுமதித்தனர்.
What's Your Reaction?