‘அந்த’ பத்திரிகையா நீ? இந்தா வாங்கிக்கோ! போட்டோகிராஃபரை புரட்டி எடுத்த YSR தொண்டர்கள்..!

பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஊடக சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Feb 19, 2024 - 08:31
Feb 19, 2024 - 08:31
‘அந்த’ பத்திரிகையா நீ? இந்தா வாங்கிக்கோ! போட்டோகிராஃபரை புரட்டி எடுத்த YSR தொண்டர்கள்..!

ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் பொதுக்கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகை புகைப்படக் கலைஞரைக் கட்சிக்காரர்கள் சரமாரியாகத் தாக்கிய நிலையில், பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அனந்தபுரம் மாவட்டம் ராப்தோடு என்ற இடத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. நூற்றுக் கணக்கில் கட்சித் தொண்டர்கள் கூடிய நிலையில், சித்தம் என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை செய்து கொண்டிருந்தார். அதில் செய்தி சேகரிக்க பல்வேறு ஊடகங்கள் வந்திருந்த நிலையில், மற்ற பத்திரிகைகளைப் போல்தான் ஆந்திர ஜோதி பத்திரிகையின் புகைப்படக் கலைஞர் கிருஷ்ணா என்பவரும் போயிருந்தார். 

ஆனால், அங்கே பத்திரிகைக் காரர்களை நிறுத்தி விவரங்களைக் கேட்ட பிறகே தொண்டர்கள் உள்ளே விட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, ஆந்திர ஜோதி பத்திரிகை என்று கேள்விப்பட்டதும் கிருஷ்ணாவை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்கத் தொடங்கினர். கண நேரத்தில் அடி உதைக்கு ஆளான கிருஷ்ணா மீது கொடிக்கம்புகளைக் கொண்டு தொண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது அரசு குறித்த விமர்சனங்களைப் பதிவிட்டு வந்ததாலேயே ஆந்திர ஜோதி பத்திரிகை ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பலத்த காயமடைந்த கிருஷ்ணா, நிகழ்விடத்தில் இருந்து மீட்கப்பட்டு, அனந்தபுரம் சரோஜனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில், பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஊடக சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow