தொடரும் மரணக்குழிகளின் தாண்டவம்... போர்வெல்லில் சிக்கிக் கொண்ட 2.5 வயது சிறுமி மீட்கப்பட்டாரா?
ராஜஸ்தானில் இரண்டரை வயது பெண் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான், டவுசா மாவட்டத்தில் பாண்டூகி எனும் பகுதியில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது, இரண்டறை வயது பெண் குழந்தை ஒன்று, சுமார் 600 அடி ஆழமுடைய ஆள்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது. உடனே, அப்பகுதியில் இருந்தவர்கள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தனர்.
இதையடுத்து, அம்மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார், எஸ்.பி. ரஞ்சிதா ஷர்மா மற்றும் மீட்பு படை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து குழந்தையை மீட்கும்பணிகளில் ஈடுபட்டனர். குழந்தை போர்வெல்லில் 200 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டிருப்பதை உறுதிப்படுத்தினர். பின், குழந்தையை மீட்க, அந்த போர்வெல்லின் அருகே 25 அடி தூரத்தில் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு குழி தோண்டப்பட்டது.
ஆள்துளைக் கிணற்றுக்குள் குழந்தைக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்ப்பட்டு, மேலும், குழிக்குள் கேமராக்களை உள்ளே செலுத்தி குழந்தையின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்தனர். 30 தேசிய மீட்புப்படையினர், 10 மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர்.மீட்புப் பணிகள் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிலையில் இதுகுறித்து அம்மாவட்ட எஸ்.பி. ரஞ்சித் ஷர்மா தெரிவித்ததாவது,“குழந்தையின் அசைவுகளை கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகிறோம், குழந்தையை பாதுகாப்பாக மீட்க பல வழிகளில் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்”, எனவும் கூறினார்.
மேலும் அம்மாவட்ட ஆட்சியர் கூறுகையில், குழந்தைக்கு ஆக்ஸிஜன் தேவைக்காக மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு, மேலும், குழந்தைக்கு உணவு வழங்கவும் இயன்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இந்நிலையில், 15 மணி நேர தொடர் போராட்டத்திற்குப் பின் அந்த சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.
சிறு குழந்தைகள் இப்படி அடிக்கடி ஆள்துளைக் கிணறுகளில் விழும் நிலையில் அதிகரித்து வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டில் கூட திருச்சியைச் சேர்ந்த தம்பதியின் குழந்தையான சுஜித் என்ற சிறுவன் ஆள்துளைக் கிணற்றில் விழுந்து சுமார் 89 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார். அந்த செய்தி தமிழ்நாட்டையே உலுக்கியிருந்தது அனைவரும் அறிந்ததே.
இதேபோல கடந்த ஏப்ரல் மாதம், மத்திய பிரதேசத்திலும், 6 வயது சிறுவன் ஆள்துளைக் கிணற்றில் விழுந்து 40 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் இறந்த நிலையில் மீட்கப்பட்டான். குஜராத்திலும் ஆள்துளைக் கிணற்றுக்குள் விழுந்த ஒன்றரை வயது சிறுமி சுமார் 17 மணி நேரத்திற்கும் மேல் குழிக்குள் சிக்கி உயிரிழந்தார்.
இப்படி மூடப்படாமல் இருக்கும் ஆள்துளைக் கிணறுகளில் விழுந்து சிறு உயிர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டில் பிரைன்ஸ் என்ற 6 வயது குழந்தை போர்வெல்லில் விழுந்து, சுமார் 50 மணி நேரத்திற்கு பிறகு, மீட்கப்பட்டது.
தேசிய பேரிடர் மீட்புத்துறையின் தகவல்படி, இந்தியாவில் 2006-ம் ஆண்டிலிருந்து, தற்போது வரை சுமார் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதுபோன்று ஆள்துளைக் கிணற்றில் விழுந்து இயற்கைக்கு இரையாகியுள்ளனர். அவற்றில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளில் 70 % தோல்வியிலேயே முடிந்துள்ளது.
தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இதுபோன்ற மரணக்குழி நிகழ்வுகளைத் தடுக்க ஏதேனும் முயற்சிகள் ஏற்பட்டால் இனியாவது இன்னொரு சுஜித், இன்னொரு பிரின்ஸ் என சிறு உயிர்கள் இருட்டுக்குள் புதைந்து போகாமல் இன்னும் சில காலம் சிரித்துக்கொண்டிருக்க வழிவகுக்கும்.
What's Your Reaction?