பிரதமர் மீதான பொய் பிரசாரங்களை நிறுத்துங்கள்! முதலமைச்சருக்கு எல். முருகன் எச்சரிக்கை...
தமிழை வைத்து பிழைப்பு நடத்த முதலமைச்சர் எத்தனிக்க வேண்டாம் எனவும் எல் முருகன் பேசினார்
பிரதமர் இந்தியைத் திணிக்க முயல்வதாகக் கூறும் பொய் பிரசாரத்தை முதலமைச்சர் ஸ்டாலினும், திமுகவும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் எச்சரிக்கை விடுத்தார்.
நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழைப் போற்றும் பிரதமர் மோடியை பார்த்து, இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றார். திருக்குறளை 35 மொழிகளில் மொழிபெயர்த்தது, பாரதியாருக்கு ஹிந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைத்தது, தமிழகத்துக்கும், காசிக்கும் உள்ள தொடர்பை ஆழப்படுத்தும் நோக்கில் காசி தமிழ்ச் சங்கமம் எனத் தமிழ்மொழிக்கு பிரதமர் மோடி நிறைய செய்திருக்கிறார் என்று பட்டியலிட்டார்.
தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி எந்த நாட்டுக்குச் சென்றாலும், உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ்தான் எனக் கூறுவதாக பெருமிதம் தெரிவித்த எல்.முருகன், தமிழ்நாட்டின் பாரம்பரியமான செங்கோலை, நாடாளுமன்றத்தில் நிறுவி, தமிழ்க் கலாசாரத்திற்கு மரியாதை செலுத்தினார் என்றும் கூறினார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் ஆதீனங்கள் கலந்துகொண்டதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், திமுகவினரும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரைப் பற்றி பொய் பிராசங்கள் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசிய எல்.முருகன், தமிழை வைத்து பிழைப்பு நடத்த எத்தனிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். பிரதமர் மோடி தமிழ் மொழிக்கும், பண்பாட்டுக்கும், கலாசாரத்திற்கும் மரியாதை கொடுப்பவர் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் அவர் பேசினார்.
What's Your Reaction?