10ம் வகுப்பு தேர்ச்சி பெறாமலே பிளஸ் 2 படிக்கும் மாணவன்:பள்ளி நிர்வாகம் அலட்சியம்-கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை?
மாவட்ட நிர்வாகம் மாணவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சிவகங்கை அருகே 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாமலே பிளஸ் 1 தேர்ச்சி பெற்று பிளஸ் 2 படித்து வந்த மாணவனை திடீரென அரசு பள்ளி நிர்வாகம் பள்ளியில் இருந்து வெளியேற்றிய சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.10ம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் 11ம் வகுப்பில் எப்படி தேர்ச்சி பெற்றான், 12ம் வகுப்பில் பாதியோடு நீக்கியதன் குழப்பம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் .
சிவகங்கை மாவட்டம், வி.மலம்பட்டி அருகே மாணிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராமன் பார்வதி தம்பதியினர்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் சரவணன் எட்டாம் வகுப்பு வரை மேட்டுப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.அதனை தொடர்ந்து 2020ல் வி.மலம்பட்டிகள் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்து படித்து வந்தார். மே 2022ல் பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதியபோது கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தோல்வியடைந்தார். உடனடியாக ஆகஸ்டு 22ல் மீண்டும் தேர்வு எழுதி இரண்டு படங்களில் மட்டும் வெற்றி பெற்றார்.
அறிவியல் பாடத்தில் கருத்தியல் (THORY) பாடத்தில் 15 மதிப்பென் செய்முறை PRACTICAL 25 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். 40 மதிப்பென் பெற்றாலும் THORY யில் 20 பெற வேண்டும்.ஆனால் 15 பெற்றதால் அறிவியலில் தேர்ச்சி பெறவில்லை. 40 மதிப்பென் பெற்றதால் தேர்ச்சி பெற்றதாக நினைத்து ஆகஸ்ட் 2022ல் வி.மலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மீண்டும் 11ம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.பள்ளி நிர்வாகத்தின் கவனகுறைவால் அட்மிஷன் கொடுத்துள்ளனர்.2023 மார்ச் மாதத்தில் + 1 தேர்வு எழுதி 254/600 மதிப்பெண் பெற்று பிளஸ் 1 தேர்ச்சி பெற்றுள்ளார். தற்பொழுது பிளஸ் 2 காலாண்டு தேர்வு எழுதி முடித்து அரையாண்டு தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கும்போது மாணவன் சரவணன் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து மாணவனின் பெற்றோரை அழைத்து பள்ளி தலைமை ஆசிரியர் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு மாணவனை பள்ளியிலிருந்து வெளியேற்றினர்.இதனால் படிப்பறிவு இல்லாத பெற்றோர்களும் செய்வது அறியாமல் புலம்பி வருகின்றனர்.பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்று முன்னதாகவே தெரிவித்து மாணவனுக்கு நல்வழி காட்டாமல் மோசடி செய்து விட்டதாக பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.அதேநேரம் தேர்ச்சி பெறாத மாணவனை பள்ளியில் எப்படி சேர்த்தார்கள் என்றும் ஆசிரியர்களின் கவனக்குறைவால் தற்போது மாணவனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், ஆன்லைன் மூலமாக மதிப்பெண் சான்று ஜெராக்ஸ் கொண்டு வந்ததால் குழப்பம் ஏற்பட்டது என்று ஆசிரியர்கள் கூறுவதாக தெரிவிக்கின்றனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமலே உயர்கல்வி சேர்ந்து பிளஸ் 1 முடித்த சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மாணவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
What's Your Reaction?