தீட்சிதர்களின் குற்றச்சாட்டு தவறானது-அறநிலையத்துறை விளக்கம்

அறநிலையத்துறை தரப்பில் தீட்சிதர்களுக்கு எதிராக எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை என்றும் விளக்கம்

Dec 19, 2023 - 12:36
Dec 19, 2023 - 17:06
தீட்சிதர்களின் குற்றச்சாட்டு தவறானது-அறநிலையத்துறை விளக்கம்

சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தை பறிக்க வேண்டுமென்ற உள்நோக்கத்தில் குழந்தை திருமணம் குறித்து சட்ட நடவடிக்கையை எடுத்திருப்பதாக தீட்சிதர்கள் கூறும் குற்றச்சாட்டு தவறானது என அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள பொது தீட்சிதர்கள் 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு திருமணங்கள் செய்து வைக்கின்றனர் என்றும், இந்த குழந்தை திருமணங்களை தடுக்க இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், ஆணையர், சமூக நலத்துறை செயலாளர், கடலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அடங்கிய நிரந்தர கண்காணிப்பு குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் எஸ்.சரண்யா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் சார்பில் கடலூர் அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் என்பவரின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் மீது போக்சோ தடுப்பு மற்றும் திருமண தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தது, கைது நடவடிக்கை  தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் அனுப்பிய நோட்டீசை தொடர்ந்து, இணை ஆணையர் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில், பொது தீட்சிதர் குடும்பத்தினர் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்திற்கு விரோதமாக திருமணங்கள் செய்துவைப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையிலேயே கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

குழந்தை திருமணம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாருக்கும், அறநிலையத்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அறநிலையத்துறை தரப்பில் தீட்சிதர்களுக்கு எதிராக எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை தீட்சிதர்களிடமிருந்து பறிக்கும் உள்நோக்கத்தோடு சமூக நலத்துறை அதிகாரியும், அனைத்து மகளிர் காவல் நிலையத்தினரும் இந்த சட்ட நடவடிக்கையை எடுத்திருப்பதாக தீட்சிதர்கள் கூறும் குற்றச்சாட்டு அச்சத்தின் காரணமாக கூறப்படும் தவறான குற்றச்சாட்டு எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருமணங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்களை அமைப்பது என்பது அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் எனவும், மனுதாரரின் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதையடுத்து வழக்கின் விசாரணை ஜனவரி 8ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow