காஞ்சி : பாதுகாப்பு உபகரணங்கள் கோரும் தூய்மைப் பணியாளர்
நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க அவ்வப்போது சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை
காஞ்சிபுரத்தில் கொட்டு மழையிலும் தூய்மை பணி செய்யும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மாநகராட்சி வழங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய துவங்கியுள்ளது.மேலும் வரும் நாட்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையையொட்டி காஞ்சிபுரத்தில் அவ்வப்பொழுது விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகளில் ஒப்பந்த பணியாளர்கள் 328 நபர்களும், நிரந்தர பணியாளர்கள் 96 நபர்களும் தூய்மை பணிகளில் பணிபுரிகின்றனர்.தற்போது வடகிழக்கு பருவ மழையையொட்டி பெய்து வரும் தொடர் மழையையும் பொருட்படுத்தாமல், மாநகரில் தேங்கி இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என பலதரப்பட்ட குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக மழையில் நனையாமல் இருக்க பிளாஸ்டிக் கவர்களை தலையில் போட்டுக் கொண்டு தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரு சிலர் மழையில் நனைந்து ஈர உடைகளுடன் பணிபுரிந்து வருவது காண்போரிடத்தில் வேதனையை அளிக்கிறது.
எனவே மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும், மழையில் நனைந்தாலும் உடல் நனையாமல் இருக்க ரெயின் கோட் வழங்கப்பட வேண்டும், பருவமழையின்போது அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க அவ்வப்போது சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வெகுவாக எழுந்துள்ளது.
நோய்த்தொற்று பகுதிகளிலும் நேரம் காலம்பாராது பணியாற்றிய நேசமிகு தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் விரைவாக ரெயின் கோட், கையுறை போன்ற உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜை தொடர்பு கொண்டு கேட்டதற்கு,“வடகிழக்கு பருவமழை சம்பந்தமாக அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தினோம். அக்கூட்டத்தில் இது சம்பந்தமாக பேசப்பட்டுள்ளது.விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார்.
What's Your Reaction?