முருகனை லண்டனுக்கு அனுப்ப மத்திய அரசு மறுப்பு

இலங்கை துணை தூதரகம் அழைக்கும் போது முருகனுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

Dec 19, 2023 - 12:12
Dec 19, 2023 - 16:57
முருகனை லண்டனுக்கு அனுப்ப  மத்திய அரசு மறுப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து உச்சநீதிமன்றத்தால் விடுதலையான முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்து, கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட இலங்கை நாட்டைச் சேர்ந்த முருகன், சாந்தன் உள்ளிட்டோர் திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் தாக்கல் செய்த மனுவில், லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பதற்காக திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் சென்று வருவதற்கு பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தனபால் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷன் ஆஜராகி,கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கையை சேர்ந்த முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது எனவும், இலங்கை நாட்டின் துணை தூதரகம் ஆவணங்களை வழங்கினால் மட்டுமே இலங்கைக்கும் திருப்பி அனுப்ப முடியும் என தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பில், திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு முருகனை அழைத்து வர போதுமான காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் தெரிவிக்கபட்டது.இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், முருகனுக்கு பயண ஆவணம் வழங்குவதற்கான நேர்காணலுக்கு இலங்கை துணை தூதரகம் அழைக்கும் போது முருகனுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow