கீழடி 10 கட்ட அகழாய்வு : சுடுமண் தொட்டி கண்டெடுப்பு

கீழடியில் நடைபெற்று வரும் 10ம் கட்ட அகழாய்வில் கலைநயம் மிக்க சுடுமண் தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

Oct 5, 2024 - 15:13
கீழடி 10 கட்ட அகழாய்வு : சுடுமண் தொட்டி கண்டெடுப்பு
keezhadi excavation

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி தொல்லியல் களம் வரலாற்றுப் பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது. நகர நாகரிகம் தமிழகத்தில் தோன்றவில்லை என்கிற கருத்துக்கு மாறாக,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகைக் கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. கீழடியில் தோண்டத் தோண்ட பழங்கால பொருட்கள் நிறைய கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

தற்போது தமிழகத் தொல்லியல் துறை மூலம் கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.  கடந்த ஜூன் 18ம் தேதி முதல் துவங்கிய பணியில் தொல்லியல் துறை இயக்குனர் ( கீழடி பிரிவு) ரமேஷ் தலைமையில், இணை இயக்குனர் அஜய் , தொல்லியல் துறை மாணவ, மாணவியர்கள், தொழிலாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த அகழாய்வில் இதுவரையிலும் ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டகாய், தா என்ற தமிழி எழுத்து, மீன் உருவ பானை ஓடுகள், சுடுமண் அணிகலன், சுடுமண் குழாய், செங்கல் கட்டுமானம், சிவப்பு நிற பானை என 50க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக ஒன்பதாவதாக தோண்டப்பட்ட குழியில் ஒன்றரை அடி விட்டம் கொண்ட சுடுமண் தொட்டி ஒரு அடி உயரம் வரை மேற்பகுதி மட்டும் வெளிப்பட்டுள்ளது. இதன் விளிம்பில் கலைநயம் மிக்க வளைவான கோடுகள் உள்ளன. 

ஏழம் கட்ட அகழாய்வின் போது மீன் உருவம் பொறிக்கப்பட்ட உறைகிணறும், சுடுமண் தொட்டியின் பக்கவாட்டுப் பகுதியில் கயிறு போன்ற அமைப்பும் கண்டறியப்பட்டது. பத்தாம் கட்ட அகழாய்வும் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்திலேயே நடந்து வருகிறது. தற்போது கிடைத்துள்ள சுடுமண் தொட்டி அருகிலேயே இருவண்ண சுடுமண் பானை, கொடி போன்று வரையப்பட்ட பானை , வளைவான கோடுகள் கொண்ட பானை உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன. 

கலைநயம் மிக்க சுடுமண் தொட்டியில் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் இன்னும் அடியில் தோண்டும் போது தான் இது உறை கிணறா என்பது தெரியவரும் என தொல்லியல் துறையினர் கருதுகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow