ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிட்டியில் 193 அணிகள் பங்கேற்ற நிலையில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.
இந்திய ஆடவர் அணி தொடர்ச்சியாக 8 சுற்றுகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், 9வது சுற்று டிராவில் முடிந்தது. 10வது சுற்று முடிவில் 19 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் இருந்தது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஸ்லோவேனியா அணிக்கு எதிரான போட்டியைச் சமன் செய்த நிலையில், குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா, விதித் குஜ்ராத்தி
அடங்கிய அணி தங்கம் வென்றனர்.
இதே போன்று இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் அஜர்பைஜான் அணியை எதிர்கொண்டது. இதில் ஹரிக்கா, திவ்யா, வைஷாலி ஆகியோர் இடம் பெற்றனர். இதில் அஜர்பைஜான் அணியை இந்திய அணி வீழ்த்தி தங்கம் வென்றது.
இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியினருக்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் நிகழ்வில் பொது மற்றும் மகளிர் என இரு பிரிவிலும் தங்கம் வென்றுள்ள இந்திய அணியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். செஸ் உலகின் தலைசிறந்த போட்டியில், மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடி, நாட்டிற்கு நம் அணியினர் பெரும் புகழைச் சேர்த்துள்ளது மெச்சத்தக்கது எனப் பதிவிட்டுள்ளார்.