மத நல்லிணக்கம்: தர்காவில் ஆடுகளை பலியிட்டு விருந்து படைத்த இந்துக்கள்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இஸ்லாமியர்களின் தர்காவில் இந்துக்கள் 100ற்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு சமபந்தி விருந்து வழங்கி வழிபட்ட சம்பவம் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சீவலாதி கிராமத்தில் அமைந்துள்ளது கண்டுமேக்கியார் தர்கா. இந்த தர்கா 500 ஆண்டுகள் பழமையானது. இப்பகுதியில் உள்ள இந்துக்களும் இசுலாமியர்களும் மத நல்லிணக்கத்தோடு தோழமை உறவுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கண்டுமேக்கியார் தர்காவில் இசுலாமியர்களும் இந்துக்களும் ஒன்றிணைந்து 100க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு தர்காவில் மல்லிகைப்பூ,பொறி ஆகிய பூஜைப் பொருட்களைக் கொண்டு உலக ஒற்றுமைக்காக வழிபட்டனர்.
வழிபாடு முடிந்த பின்னர் தர்காவின் வாசலில் சுடச் சுட சமையல் செய்து பட்டை ஓலையில் கறிசோறு வைத்து வழிபட்டனர். பின்னர் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று அனைவரும் கறிசோற்றை வாங்கி உண்டனர். பின் அனைவருக்கும் விபூதி குங்குமம் வெல்லம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இஸ்லாமியர் வழிபாட்டுத்தளத்தில் இந்துக்கள் ஒன்றிணைந்து இன்று ஒரு நாள் மட்டும் திருவிழா கொண்டாடுவது இந்த கிராம மக்களின் வழக்கம் . இச்சம்பவம் இந்து இஸ்லாமியர்கள் இடையே மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
இந்து, முஸ்லீம் மதத்தினரிடையே ஒற்றுமை நிகழும் பொருட்டு தமிழகத்தின் பல ஊர்களில் இது போன்ற சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. இந்து - இசுலாமிய உறவில் தமிழ்நாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன் மாதிரியாகத் திகழ்கிறது. இது போன்ற நல்லிணக்க செயல்பாடுகளே இதற்கு முக்கியக் காரணம்.
What's Your Reaction?