சென்னை, கோவை, மதுரையில் உயிர்காக்கும் எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை.. மா.சுப்ரமணியன் அறிவிப்பு
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் என்ற புதிய சான்றிதழ் படிப்பு (Certificate Course for Home Based Elderly Care Support Assistant) தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.உயிர்காக்கும் எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை (Bariatric Surgery) சென்னை ஸ்டான்லி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை சார்ந்த முக்கிய 20 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டார்.
1.கலைஞர் நூற்றாண்டு உயர் மருத்துவமனை-கிண்டி சிறப்பு வளாகத்திலும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி இராசா மிராசுதார் மருத்துவமனையிலும் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை ரூ. 250 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
2.சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக மருத்துவமனை ரூ.50 கோடி மதிப்பீட்டில்
அமைக்கப்படும்.
3.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ், ஆறு மண்டல ஆராய்ச்சி மையங்கள் ரூ. 16 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
4.கருப்பைவாய், மார்பக மற்றும் வாய் புற்றுநோய்களை பரிசோதனைகள் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சையளிக்கும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.27 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்படும்.
5.சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை மற்றும் இரைப்பை குடலியல் ஆகிய இரண்டு புதிய சிறப்புத் துறைகள் உருவாக்கப்படும். மேலும், விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைப் பிரிவு சேவைகளை மேம்படுத்த 5 அவசரகால மருத்துவ அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
6.பிறப்புற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பிறவிக் குறைபாடுகளை கண்டறிய முழுமையான உடற் பரிசோதனைகள் (Head to Toe Examination) அந்தந்த அரசு மருத்துவமனைகளிலேயே பிரத்தேக சுகாதார அட்கைள் (Child Health Card) வழங்கப்படும். மேலும், தொடர்ந்து பச்சிளம் குழந்தையின் வளர்ச்சி மற்றும் நலத்தை கண்காணிக்க சிறப்பு மையங்கள் (Well Baby Clinic) நடத்தப்படும்.
7.சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவிலிருந்து விடுவிக்கப்படும் குறைப் பிரசவம் மற்றும் எடை குறைவான பச்சிளம் குழந்தைகளை தொடர்ந்து அவர்களது இல்லங்களிலேயே தொழில்நுட்ப உதவியோடு கண்காணிப்பதற்கான முன்னோடித் திட்டம் ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். ஏழு மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்
8.கர்ப்பகாலத்தில் கருவில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடுகளை கர்ப்பிணித் தாய்மார்களில் கண்டறிவதற்கான ”ஊடுகதிர் பரிசோதனை” (Fetal Anomaly Scan) மேற்கொள்ளப்படும்.
9.நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளில் நோய்க் கட்டுபாட்டின்மையால் வரக்கூடிய விழித்திரை மற்றும் சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான சிறப்பு பரிசோதனைகள் ரூ.3.19 கோடி மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் நடத்தப்படும்.
10.நீரிழிவு நோயினால் ஏற்படும் பாத பாதிப்புகளை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, கால் இழப்பினைத் தடுப்பதற்கான “ஒருங்கிணைந்த பாதம் பாதுகாப்போம் திட்டம்” ரூ.26.62 கோடி மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்.
11.திருவள்ளூர், கடலூர், இராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருதய உள்ளூடுருவி கதிரியக்க ஆய்வகங்கள் (Cathlab) ரூ.32 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
12.அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்டார மருத்துவமனைகளுக்கு ரூ.101 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
13.சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் ரூ. 18.13 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
14.மலைவாழ் மக்களுக்கு அவசர மருத்துவ சேவைகளை அளிக்கும் வகையில் இரு சக்கர அவசரகால மருத்துவ வாகனங்கள் (Bike Ambulance) ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
15.பழங்குடியினர் நலவாழ்வை மேம்படுத்திடும் வகையில் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தனிப் பிரிவு, நான்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு காத்திருப்பு அறைகள் மற்றும் இதர வசதிகள் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். ரூ.1.08 கோடி
16.25 அரசு மருத்துவக் கல்லூரிகளிலுள்ள நூறு வகுப்பறைகள் நவீன தொழில்நுட்பத்துடன் ரூ.50 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.
17.தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் இதர பொது வாகன ஓட்டுநர்களுக்கு, விபத்து மற்றும் அவசர காலங்களில் வழங்க வேண்டிய உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி வழங்கப்படும்.
18.அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ”முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர்” என்ற புதிய சான்றிதழ் படிப்பு (Certificate Course for Home Based Elderly Care Support Assistant) தொடங்கப்படும்.
19.உயிர்காக்கும் எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை (Bariatric Surgery) சென்னை ஸ்டான்லி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்படும்.
20.மாவட்டந்தோறும் போதை மீட்பு மையங்கள் மற்றும் முகாம்கள் வாயிலாக சமூக அளவிலான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை சேவைகள், குழு மற்றும் தனிநபர் மனநல ஆலோசனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பு சேவைகள் வழங்கப்பட்டு உரிய மறுவாழ்வு சேவைகள் அளிக்கப்படும்.
What's Your Reaction?