சுதந்திர போராட்ட வீரர்கள் உருவான வரலாற்று சிறப்பு மிக்க சிறை.. ஆய்வு செய்த உயரதிகாரிகள்..

May 4, 2024 - 08:40
சுதந்திர போராட்ட வீரர்கள் உருவான வரலாற்று சிறப்பு மிக்க சிறை.. ஆய்வு செய்த உயரதிகாரிகள்..

திருவாடானையில் உள்ள கிளைச் சிறை சேதமடைந்துள்ளதால் அதனை ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். திருவாடானையில் உள்ள கிளைச் சிறை மிகவும் சிதிலமடைந்து காணப்படுவதால், இதனை புதுப்பிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.மேலும் இந்த சிறைச்சாலைக்கு பல வரலாறுகள் உள்ளதாக கூறப்படுகிறது. பல தலைவர்கள் இங்கிருந்து தான் உருவாகி உள்ளதால் இது மிகவும் பிரபலமான சிறைச்சாலையாகவும் பார்க்கப்படுகிறது.அதாவது வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தின்போது ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின்னர், திருவாடானையில்தான் முதல் சுதந்திரப் போராட்டம் வெடித்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து, ஏராளமானோர் இந்த சிறைச்சாலையில் தான் அடைக்கப்பட்டனர். 

அப்படி பட்ட காலகட்டத்தில் அங்கிருந்த கைதிகளை மீட்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுகூடி இந்த திருவாடனை சிறைச்சாலைக்கு தீ வைத்ததாக சொல்லப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காவலர்கள் ஊர் ஊராகச் சென்று பல இளைஞர்களைப் பிடித்து இந்த சிறையில் அடைத்து  தான் துன்புறுத்தியுள்ளனர். இதனால், இந்த சிறைச்சாலையிலிருந்து தான்  நூற்றுக்கணக்கான தியாகிகள் உருவாகியுள்ளதாக வரலாறு சொல்கிறது. மேலும்,போராடிய சுதந்திர போராட்ட வீரர்களை சக போராட்ட காரர்கள் இந்த சிறையை உடைத்து மீட்ட பெருமையும் இந்த சிறைச்சாலைக்கு உள்ளது.

இவ்வளவு வரலாற்று சிறப்பையும் பெருமையும் கொண்டுள்ள இந்த சிறைச்சாலை நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், கிளை சிறைச்சாலையாக செயல்பட்டு வந்தது. தற்போது எந்தவித பராமரிப்பும் இல்லாததால், சிறைச்சாலைக் கட்டடம் சேதமடைந்து இடிந்து விழும்  அபாய நிலையில் உள்ளதால் மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த சிறைச்சாலை இல்லாததால் கைதிகளை சிறையில் அடைக்க போலிசார் ராமநாதபுரத்திற்கும், மதுரைக்கும் மற்றும் தொலைதூரங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களை கடந்து சென்று கைதிகளை கூட்டிச் செல்வதில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக கூறுகின்றனர்.

இதற்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டும் கட்டுமான பணி தொடங்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டதால் பலரும் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில் அனைவரின் நலனில் அக்கறை கொண்டு சிறைச்சாலை கட்ட உள்ள இடத்தினை உயரதிகாரிகள் ஆய்வு செய்து கட்டுமான பணிகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow