“வாட்ஸ்ஆப்பில் வருவதை நம்பாதீர்கள்” எல்லாமே உருட்டு.. எச்சரிக்கும் தேர்தல் ஆணையம்

அதிகாரப்பூர்வ தகவல்களை தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Apr 11, 2024 - 11:01
“வாட்ஸ்ஆப்பில் வருவதை நம்பாதீர்கள்” எல்லாமே உருட்டு.. எச்சரிக்கும் தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? உங்கள் வாக்கு ஏற்கனவே போடப்பட்டுள்ளது என்று சொல்கிறார்களா? இதைப் பண்ணுங்க என்று வாட்ஸ்ஆப்பில் வெளியாகி வரும் விழிப்புணர்வு செய்திகளைப், பொய் என்று எச்சரிக்கிறது தேர்தல் ஆணையம்... வதந்தி என்ன? உண்மை என்ன?

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வார காலமே உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வருகிறது. இது இப்படி இருக்க, வாக்குப்பதிவின்போது இதைப் பண்ணுங்க, அதை பண்ணுங்க என்று வாட்ஸ்ஆப் பல்கலைக்கழகங்கள் வழக்கம்போல் வதந்திகளைத் தீயாய்ப் பரப்பத் தொடங்கிவிட்டன. அப்படி சமீபத்தில் உண்மை போலவே சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு உருட்டு செய்தியை நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளது தேர்தல் ஆணையம். 

அந்தச் செய்தியில் என்ன இருக்கிறது? 

வாக்குச் சாவடிக்கு ஓட்டுப்போடப் போகும் உங்கள் பெயர், பட்டியலில் இல்லை என்றால், சட்டப்பிரிவு 49 A வின் படி, நீங்கள் உங்களது ஆதார் கார்டையோ, வாக்காளர் அட்டையையோ காட்டி ‘சேலஞ்ச் ஓட்’ எனப்படும் ‘சவால் வாக்கு’ நடைமுறையைக் கோரி, வாக்களிக்கலாம். அதேபோல் உங்கள் வாக்கு ஏற்கனவே போடப்பட்டுள்ளது என்று தேர்தல் அலுவலர்கள் கூறினால், ‘டெண்டர் ஓட்’ என்ற முறைப்படி நீங்கள் உங்கள் வாக்குரிமையை மீண்டும் பெறலாம் என்றும், இப்படி 14%-க்கு மேல் டெண்டர் வாக்குகள் பதிவானால் அந்தப் பகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உண்மை என்ன? 

பார்ப்பதற்கு உண்மை போலவே தெரியும் இந்தத் தகவலில் முதல் தகவலே பொய்யானது என்கிறது தேர்தல் ஆணையம். அதாவது, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்காளர் அடையாள அட்டையே வழங்கப்படும் என்பதே நடைமுறை. அதனால், சவால் வாக்கு என்று குறிப்பிட்டுள்ள நடைமுறையே கிடையாது என்கிறார்கள். மேலும், அதில் குறிப்பிட்டுள்ள சட்டப்பிரிவு 49 A என்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பற்றிப் பேசும் சட்டப்பிரிவே அன்றி, சேலஞ்ச் வாக்குகள் பற்றியானது இல்லை எனப்படுகிறது. 

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், அவர் வாக்களிக்கவே முடியாது என்பதுதான் அடிப்படையும் உண்மையும் என்கிறார்கள் எச்சரிக்கை அளித்தவர்கள்.
ஆனால், டெண்டர் வாக்கு பற்றிய தகவல் உண்மையே என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம் வாட்ஸ்ஆப் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று எச்சரித்துள்ளது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow