திமுகவின் கூட்டணி மாடல் வெற்றியின் காரணம் இதுதான்

திமுகவின் கூட்டணி மாடல் வெற்றியின் காரணம் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

Apr 17, 2024 - 17:02
திமுகவின் கூட்டணி மாடல் வெற்றியின் காரணம் இதுதான்

சுமார் ஓராண்டு காலமாக ஊடகங்களின் மிகப்பெரிய பேசுபொருளாக அமைந்தது கட்சிகள் அமைக்கப் போகும் கூட்டணி விவகாரம். பார்வையாளர்கள் சலித்துப் போகும் அளவிற்கு கூட்டணி குறித்த விவாதங்கள் செய்தி ஊடகங்கள் வழியே மக்களை வந்து சேர்ந்தன. தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் மட்டும் இந்தத் தலைப்பின் கீழ் நூற்றுக்கணக்கான விவாதங்கள் நடந்திருக்கும். வெறும் தொகுதி பங்கிடாக இருக்கிற கூட்டணி அமலாக்கத்துறை ரெய்டுக்கு பயந்து அமைந்த கூட்டணி என பல காரணங்களால் கூட்டணிகள் உருவாயின. நல்ல ஆஃபர் கொடுப்பவரோடு கூட்டணி என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு கூட்டணி அமைத்த கட்சிகளையும் தமிழ்நாடு இந்த தேர்தலில் பார்த்தது.  

இப்படிப்பட்ட கூட்டணி பேட்டன்களில் திமுக உருவாக்கி இருக்கும் மாடல் மிகவும் குறிப்பிடத்தக்கது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உறுதியாக நீடிக்கின்ற கூட்டணியாக, திமுக கூட்டணி இருக்கிறது. இந்த கூட்டணியைச் சிதைப்பதற்கு ஒன்று அல்ல, இரண்டு தரப்பினர் கடுமையாக முயற்சி செய்தார்கள். பாஜக இந்தக் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி பிரிக்க நினைத்தது. அதிமுக அதிகபட்ச சமரசத்திற்கு தயார் எனும் சமிக்கையோடு இந்த கூட்டணியை உடைக்க முயற்சி செய்தது. காங்கிரஸ் கட்சியின் காயத்திற்கு எங்களிடம் மருந்து இருக்கிறது எனும் தொனியில் அதிமுக வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தது. ஆயினும் இந்த கூட்டணியைப் பிரிப்பதில் அவர்கள் வெற்றி பெற முடியவில்லை.   

ஏன் திமுக கூட்டணியை உடைக்க முடியவில்லை. அதற்கு பல்வேறு காரணங்களை பட்டியலிட முடியும். முதலில் இந்தக் கட்சிகள் எல்லாவற்றுக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டிய நெருக்கடி இருந்தது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏனைய கட்சிகள் அரசியல் செய்ய முடியாத அளவிற்கு இந்த ஜனநாயக கட்டமைப்பு சிதைக்கப்படும் என நம்புவதற்கு வேண்டிய எல்லா காரணங்களையும் பாஜக உருவாக்கி வைத்தது. மாநில அரசுகள் முனிசிபாலிட்டி போல மாற்றப்படும் பட்சத்தில் பாஜகவோடு போட்டியிட்டு மாநில அரசியலில் நீடித்திருப்பது என்பது கட்சிகளுக்கு சாத்தியம் இல்லாமல் போகும் என்பது உண்மைதான். ஆயினும், இந்த உண்மைதான் அகில இந்தியா அளவிலும் இந்தியா கூட்டணி வலுவாக உருவாகக் காரணம்.  

இதே நிலைமை இருக்கும் ஏனைய மாநிலங்களில் இல்லாத கூட்டணி உறுதி தமிழகத்தில் மட்டும் எப்படி சாத்தியமானது? அதற்கு மிக முக்கியமான காரணமாகத் தோன்றுவது, திமுக இந்த கட்சிகளை உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைத்தது. பிற கட்சிகளுடனான இணக்கத்தைத் தேர்தல் காலத்தில் மட்டுமில்லாமல், தொடர்ச்சியாக திமுக தலைமை பராமரித்து வந்தது. பிற கட்சிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது முதல் தமது கட்சி நிகழ்ச்சிகளில் அவர்களைப் பங்கேற்க வைப்பது வரை பல தளங்களில் திமுக தங்கள் கூட்டணி கட்சிகளோடு ஒற்றுமையாக இருப்பதை உறுதிப்படுத்தியபடியே இருந்தது. அதிலும், ஸ்டாலின் கூட்டணி கட்சித் தலைவர்களை மதிப்பதில் அவர்களுக்கான முக்கியத்துவத்தை கொடுப்பதில் மிகவும் கவனமாக இருந்தார்.  

எந்தத் தலைவர் குறித்தும் அவர் குறிப்பிடும்போதும் அதிகப்படியான மரியாதையை, அன்பை வெளிப்படுத்த அவர் தயங்கியதே இல்லை. திமுக மகளிரணி நடத்திய மகளிர் உரிமை மாநாட்டுக்கு இந்தியா கூட்டணியின் பிற தலைவர்களின் வீட்டுப் பெண்கள் அழைக்கப்பட்டார்கள். திருமாவளவனைத் தமது அரசியல் வழிகாட்டி என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். பிரச்சாரத்துக்கு வந்த ராகுல் காந்தி ஸ்டாலினை தன் சகோதரன் என்று அழைத்தார், வேறு எந்த தலைவரையும் தான் அப்படி அழைப்பதில்லை என்றார்.  

பாஜக தலைவர்கள் தமிழக வீதிகளில் படுத்து உருண்டாலும் கண்டுகொள்ளாத சமூக ஊடகங்களில் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி ஸ்வீட் வாங்கிவரும் காட்சி வைரல் ஆகக் காரணம் அவர்களிடம் வெளிப்படும் உணர்வுப்பூர்வமான ஒற்றுமை. திமுக தனது பிரசாரத்தைத் தொடங்கிய தொகுதி கூட்டணிக் கட்சியான மதிமுக போட்டியிடும் திருச்சியில். கூட்டணிக் கட்சி போட்டியிடும் இடங்களில் திமுக சுணக்கமாக வேலை செய்கிறது என்று செய்தி வந்த ஓரிரு நாட்களில் அந்த பிரச்சனை கட்சித் தலைமையால் சரி செய்யப்படுகிறது. செந்தில் பாலாஜிக்கும் ஜோதிமணிக்கும் முரண்பாடு இருக்கிறது என்றும் அவர்கள் ஒருங்கிணைந்து வேலை செய்ய மாட்டார்கள் என்றும் பல அனுமானங்கள் செய்தி பத்திரிகைகளில் வந்தன. ஆனால் களத்தில் அதற்கான தடமே இல்லை. ஒப்பீட்டளவில் பிற தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான இணக்கத்தை இந்தியா கூட்டணியில் மட்டும் அதிகமாகவே காண முடியும்.  

இது ஒரு பெரிய விஷயமா என்று யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் மற்ற கட்சி கூட்டணிகள் எப்படி இருக்கின்றன அல்லது எப்படி இருந்தன என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் போதும். காங்கிரஸோடு கூட்டணி வைத்த ஜெயலலிதா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தையே புறக்கணித்த வரலாறு இருக்கிறது. பாஜகவோடு ஜெயலலிதா கூட்டணி வைத்தபோது சென்னையில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் பிரசாரம் செய்யாமல் தவிர்த்தார். கூட்டணிக் கட்சிக்கு பிரசாரம் செய்யாமல் தவிர்த்த பெரிய கட்சிகள் இங்கு ஏராளம். இந்தப் போக்கை கையாளாமல் திமுக தனது கூட்டணி கட்சிகளை தக்க வைப்பதை ஒரு தொடர் நடவடிக்கையாக மேற்கொண்டதன் விளைவாகத்தான் எந்த சிக்கலும் இல்லாமல் இல்லை.  

தொகுதிப் பங்கீட்டில் மனக் குறைகள் தென்பட்டன. ஆயினும், தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையை முடிந்தது. காங்கிரஸ் இடதுசாரிகள் விடுதலை சிறுத்தைகள் என எல்லா கட்சிகளின் செய்தி தொடர்பாளர்களும் எந்தத் தருணத்திலும் திமுகவை விட்டுக் கொடுக்காமல் பேசும் சூழலைக் காண முடிந்தது. அந்த வகையில் திமுக இந்தியாவிற்கு ஒரு வெற்றிகரமான கூட்டணிக் கட்சிகளைத் தக்க வைக்கும் ஃபார்முலாவை தந்திருக்கிறது என்று சொல்லலாம். பாஜக, அதிமுக கட்சிகள் தங்களது கூட்டணியை இறுதி செய்வதில் எதிர்கொண்ட சவால்களும் பின்னடைவும் நமக்கு சொல்வது என்னவென்றால், கூட்டணியை தக்க வைப்பது என்பது ஒரு அரசியல் முதலீடு. அதில் ஸ்டாலின் எல்லா கட்சிகளையும் தாண்டி முன்னணியில் இருக்கிறார். இந்த உறவு மேலாண்மையில் கவனம் செலுத்தாமல் அண்ணாமலையை பேசவிட்டதன் விளைவாக பாஜகவால் அதிமுகவை இழுத்துவரும் அசைன்மெண்ட்டில் வெற்றி பெறமுடியவில்லை. இது மிக முக்கியமான பின்னடைவு ஆகிவிட்டது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow