சட்டப்பேரவையை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

"ஆளுநர் தனது அரசியலுக்காக  சட்டப்பேரவையை பயன்படுத்திக்கொண்டார்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Feb 15, 2024 - 12:14
Feb 15, 2024 - 12:27
சட்டப்பேரவையை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டப்பேரவை ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் உரையாற்றினார். அப்போது, நாட்டின் தென் மாநிலங்கள் வளர்ந்து வருவதாகவும், வடமாநிலங்களுக்கும் சேர்த்து வாரி வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசு தயாரித்துத் தரும் அறிக்கையை பேரவையில் வாசிப்பதே ஆளுநரின் கடமை எனக் கூறிய முதலமைச்சர், வாசிக்க முடியாது என ஆளுநர் தெரிவித்திருப்பது தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என்றும் கடுமையாக சாடினார். ஆளுநர் தனது அரசியலுக்காக சட்டப்பேரவையை பயன்படுத்திக்கொண்டார் எனவும் இதுபோன்ற சிறுபிள்ளை விளையாட்டுகளை கண்டு பயந்து விடமாட்டோம் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார் 

இந்தியாவின்  பொருளாதாரத்திற்கு 9% பங்களிப்பை தமிழ்நாடு வழங்கி இருப்பதாகவும், GDP வளர்ச்சியில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். தமிழ்நாடு அரசின் சாதனைத் திட்டங்களை பிற மாநிலங்களும் செயல்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். 

தென் மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவரும் அரசுடன் இணைந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென வலியுறுத்தினார். பாஜக-வுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பதை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இனியாவது வெளிப்படையாக மத்திய அரசை அதிமுக கண்டிக்கலாம் என்றார். தமிழ்நாட்டு மக்களுக்காக சிந்தித்து செயல்பட்டு வருவதாகவும், வரும் ஆண்டுகளிலும் திமுக அரசின் சாதனைகள் தொடரும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது பதிலுரையில் குறிப்பிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow