மதில் சுவர் இடிந்த விபத்து... இனிமேல் இப்படி நடக்காது! புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் உறுதி !

இனி வரும் காலங்களில் இத்தகைய அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்

Mar 31, 2024 - 17:24
மதில் சுவர் இடிந்த விபத்து... இனிமேல் இப்படி நடக்காது! புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் உறுதி !

புதுச்சேரியில், வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது மதில் சுவர் இடிந்து விழுந்து, ஒப்பந்த தொழிலாளர்கள் 5 பேர் பலியான சம்பவத்தைப் போல இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார். 

புதுச்சேரியில், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் முதலியார்பேட்டை பகுதியில் தேங்காய்திட்டு பிரதான வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 16 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இன்று காலை வசந்தம் நகர் 3வது தெரு பகுதியில் உள்ள வாய்க்காலை பணியாளர்கள் தூர்வாரிக்கொண்டிருந்த போது, வாய்க்காலின் ஓரமாக இருந்த மின்வாரிய அலுவலகத்தின் மதில்சுவர் இடிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. 

இந்த இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். இதைதொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சிக்கியிருந்த 6 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. 

இச்சம்பவத்தை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன், இனி வரும் காலங்களில் இத்தகைய அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார். அத்துடன் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். மேலும், பணிகள் நடைபெறும் இடங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow