சென்னை பல்கலைக்கழகத்தில் குளறுபடி - தேர்தலை உடனடியாக நிறுத்த இபிஎஸ் வலியுறுத்தல்!
சென்னை பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுவிற்கான தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுவிற்கு நாளை (24.02.2024) நடைபெற உள்ள தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளம் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "சென்னை பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவுக்கான தேர்தல் நாளை(24.2.2024) நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு மனுதாக்கல் செய்வதற்கு கடைசி நாளான கடந்த 7ஆம் தேதி மாலை வரை, வாக்களிக்க தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியலை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிடவில்லை. இதன் மூலம் சென்னை பல்கலைக்கழகத்தின் 131 இணைப்பு கல்லூரிகளில், 91 சுயநிதி கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களை தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்பு அளிக்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் பல குளறுபடிகளை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதனால், நாளை (24.2.2024) நடைபெறவுள்ள சென்னை பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுவிற்கான தேர்தலை உடனடியாக நிறுத்த வேண்டும். பல்கலைக்கழக ஆசிரியர்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை திருத்தி, அனைத்து தகுதியான வாக்களிப்பவர்களின் பெயர் பட்டியலை தேர்தலுக்கு முன்பே வெளியிட்டு முறைப்படி தேர்தலை நடத்த அரசையும், சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?