7+1 க்கு தலையசைத்த அதிமுக - சுமூகமாக முடிந்த பாமக உடன்பாடு?
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க – பா.ம.க கட்சிகள் கூட்டணி தொடர்பாக ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ஜ.க – பா.ம.க இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் பா.ஜ.க சார்பில் ஜி.கே.வாசன் முன்னின்று நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது பன்னிரெண்டு தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடத்தை பா.ம.க கேட்டதாகவும், பா.ஜ.க ஏழு இடங்களை மட்டுமே அளிக்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதனை பா.ம.க ஏற்காததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனத் தெரிகிறது.
இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸை அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் சந்தித்துப் பேசியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி தொடர்பாக ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகயுள்ளது. பா.ம.க போட்டியிட விரும்பும் தொகுதி எண்ணிக்கை மற்றும் தொகுதிகளின் விபரம் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியானது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருப்பதை விட அவரது சொந்த ஊரான சேலத்தில்தான் இருப்பதைத்தான் விரும்புவார் என நினைத்து, இங்கிருந்து பேச்சுவார்த்தை நடத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது அவரது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அன்புமணி ராமதாஸ், இ.பி.எஸ்-ஐ ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது உறுதியானதாகவும், ஏழு மக்களவைத் தொகுதி சீட்டும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்க எடப்பாடி பழனிச்சாமி சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.
தர்மபுரி, கடலூர், சிதம்பரம், அரக்கோணம், கள்ளக்குறிச்சி, ஆரணி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளை வழங்க எடப்பாடி பழனிசாமி உறுதியளித்ததாக பா.ம.க தரப்பில் இருந்து வெளியான தகவல் கூறுகின்றன. அ.தி.மு.கவுடன் பா.ம.க கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், தே.மு.தி.கவையும் அ.தி.மு.க தன்பக்கம் இழுக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | “தந்தை: நேர்மை - மகன்: மேன்மை” - வி. ஏ. ஓ லூர்து ஃப்ரான்சிஸ் மகன் மார்ஷல் சிவில் நீதிபதியாக தேர்வு..!
What's Your Reaction?