விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக..எடப்பாடி பழனிச்சாமி கூறிய காரணங்கள்

விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Jun 15, 2024 - 16:51
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக..எடப்பாடி பழனிச்சாமி கூறிய காரணங்கள்

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.


விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடலநலக் குறைவால் காலமான நிலையில் இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் தற்போது தொடங்கியுள்ள நிலையில் திமுக, நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விக்ரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானதை அடுத்து அந்தத் தொகுதி காலியாக உள்ளதாக உடனடியாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து மக்களவைத் தேர்தல் நேரத்திலேயே விக்கிரவாண்டி தொகுதிக்கும் சேர்ந்து சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவைத் தேர்தல் முடிந்து கடந்த 4ஆம் தேதி ரிசல்ட் வெளியான அடுத்த சில தினங்களிலேயே இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. 


விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெரும் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும் எனவும்  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என கட்சித்தலைமை அறிவித்துள்ளது. அன்னியூர் சிவா திமுக விவசாய தொழிலாளர்கள் அணி செயலாளராக உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிட உள்ளதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிவித்துள்ளார்.

 பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக    மாநிலத்  துணைத் தலைவர் சி. அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களை அறிவித்து விட்டு தேர்தல் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் முக்கிய எதிர் கட்சியாக உள்ள அதிமுக வேட்பாளர்களை அறிவிக்காமல் அமைதி காத்து வந்தது. இந்த நிலையில் இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அதிமுக அறிவித்துள்ளது. 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. மக்களவை தேர்தலோடு 10வது  தோல்வியை சந்தித்துள்ளது.விக்கிரவாண்டியில் தேர்தல் தோல்வி அடைந்தால் அதிமுகவிற்கு மேலும் அது பின்னடைவை ஏற்படுத்தும் என்பதே புறக்கணிப்புக்கு காரணமாக உள்ளது. 

இதனிடையே விக்ரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ள, நிர்வாக திறனற்ற அராஜக விடியா திமுக ஆட்சியில் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், திமுக ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலில் ஈடுபடும். பண பலம் அதிகார பலத்தை உபயோகப்படுத்தி திமுக ஆட்சி செய்து வருகிறது.அனைவரும் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று கோடி கோடியாக பணத்தை உபயோகப்படுத்தி திமுக தேர்தலில் வெற்றி பெற முயலும் என்று குற்றம் சாட்டினார். கடந்த 2009 ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இடைத்தேர்தலை புறக்கணித்ததை போன்று தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஜெயக்குமார் கூறினார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளதால் தற்போது 3 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. திமுகவிற்கு பாமக, நாம் தமிழர் கட்சியினர் கடும் நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow