ரூ.4,000 கோடி மதிப்பிலான காவிரி - குண்டாறு திட்டத்தை முடக்கியது திமுக அரசு - இபிஎஸ் சாடல்
DMK Govt Freezes
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுக வேட்பாளார் சேவியர்தாஸை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர் ஏழையை பரம ஏழையாக்கியது திமுக அரசு என கடுமையாக சாடினார். தொடக்கத்தில் புகார் பெட்டி வைத்து மனுக்களை வாங்கிய ஸ்டாலின் பின்னர் மக்களை சந்திக்கவில்லை என்றும் மக்களிடத்தில் ஆசையை தூண்டி ஸ்டாலின் ஏமாற்றினார் என குற்றம்சாட்டினார்.
"மின்கட்டணம், வீட்டுவரி, வணிக வரி ஆகியவற்றை உயர்த்தி விட்டனர். ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு குழு அமைத்தார். மொத்தம் 52 குழுக்கள் அமைத்த ஒரே அரசு இந்த திராவிட அரசு தான். நிதி மேலாண்மை குழு அமைத்த பின்னரும் ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். நிர்வாக திறமையற்ற, பொம்மை முதல்வராக ஸ்டாலின் உள்ளார்" என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை மக்களிடத்தில் முன்வைத்தார் எடப்பாடி பழனிசாமி.
கொடுத்த வாக்குறுதியை எதையும் நிறைவேற்றாத திமுக தற்போது பெட்ரோல் விலையை ரூ.65 ஆக குறைப்பேன் என்பது நடக்கிற காரியமா? என கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சிக்கு வந்ததால் மக்களுக்கு ஏழரை சனி பிடித்துவிட்டது என பகிரங்கமாக விமர்ச்சித்தார். கள்ளத்தனமாக மது விற்று பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய அரசு திமுக என்றும் போதைக்கு மனிதர்களை அடிமையாக்கியதாகவும் சாடினார்.
ஸ்டாலின் தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு,தேர்தல் முடிந்த பின் வேறு பேச்சு என்று கூறிய எடப்பாடி தேர்தல் நேரத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் திமுக செய்திகளை வெளியிட உதவுகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் அவர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்க உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
காவல் துறை திமுக ஏவல் துறையாக மாறிவிட்டது. அதனால் தான் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றும் விமர்சித்தார்.மேலும் 4,000 கோடி காவிரி குண்டாறு திட்ட கால்வாய் பணியை அதிமுக தொடங்கி வைத்தோம். இதையும்திமுக முடக்கிவிட்டனர் என்று குற்றம் சாட்டினார்.இத்திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் சிவகங்கை பசுமையாக மாறியிருக்கும் என வேதனையுடன் கூறினார்.
What's Your Reaction?