மக்களவைத் தேர்தல் - இந்தியா முழுவதும் 60.03% வாக்குகள் பதிவு.. மணிப்பூர், மேற்குவங்கத்தில் வெடித்த வன்முறை...

நாடு முழுவதும் நடைபெற்ற முதற்கட்ட மக்களவைத் தேர்தலில் 60.03% மக்கள் வாக்களித்தனர். மணிப்பூர், மேற்குவங்கத்தில் ஆங்காங்கே வன்முறை வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Apr 20, 2024 - 07:23
Apr 20, 2024 - 08:12
மக்களவைத் தேர்தல் - இந்தியா முழுவதும் 60.03% வாக்குகள் பதிவு.. மணிப்பூர், மேற்குவங்கத்தில் வெடித்த வன்முறை...

21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கான 18-வது மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று(ஏப்ரல்-19) நடைபெற்றது. அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி, அருணாசலப்பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம, நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம், லட்சத்தீவுகள், ஜம்மு-காஷ்மீர், அந்தமான் நிகோபார் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 69.46%, சிக்கிமில் 68%, அருணாசலப்பிரதேசத்தில் 68.3%, ராஜஸ்தானில் 57.3%, உத்தரப்பிரதேசத்தில் 59.5%, மத்தியப்பிரதேசத்தில் 66.7%, பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் நெருக்கமான போட்டி நிலவும் மேற்குவங்கத்தில் 77.6% வாக்குகளும் பதிவாகின. பாஜக ஆதிக்கம் செலுத்தும் வடகிழக்கு மாநிலங்களில் 72.3%, மேகாலயாவில் 74.5%, மணிப்பூரில் 69.2%, அருணாசலப்பிரதேசத்தில் 67.7%, திரிபுராவில் 80.6% வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. 

அதேநேரத்தில் மேற்குவங்க மாநிலம் கூச்பெஹாரில் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மோதிக்கொண்டனர். வாக்காளர்களை மிரட்டி வாக்குப்பதிவு முகவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டும் நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூரில் உள்ள வாக்குச்சாவடியில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு நடவடிக்கையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 32 கைத் துப்பாக்கிகள், 3 செல்போன்கள், ஒரு கார், ரூ.15 லட்சம் உள்ளிட்டவைகளும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கிழக்கு இம்பாலின் வாக்குச்சாவடி சூறையாடப்பட்ட நிலையில் அது குறித்த விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow