"என் மண் என் மக்கள்" மாநாடு முக்கிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் - அண்ணாமலை நம்பிக்கை...
மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் என் மண் என் மக்கள் நடைபயணம் வருகிற 27ஆம் தேதி திருப்பூரில் நிறைவடைகிறது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதற்கான பணிகள் பல்லடம் அடுத்த மாதப்பூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கான பணிகள் நடைபெற்று வருவதை அண்ணாமலை இன்று (பிப்.23) நேரில் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, மாதப்பூர் பகுதியில் நடைபெற உள்ள என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாடு எழுச்சி விழாவாக இருக்கும் என்று கூறினார். 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்பு தமிழகத்தில் எத்தனையோ அரசியல் மாற்றம் நிகழ்ந்த்திருந்தாலும் இந்த மாநாட்டிற்கு பிறகு முக்கிய அரசியல் மாற்றம் நிகழும் என்றார்.
திருப்பூரில் நடைபெறும் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், வருகின்ற 27 , 28 மட்டுமல்லாது மார்ச் முதல் வாரத்திலும் பிரதமர் தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பும் பின்பும் பிரதமர் தொடர்ச்சியாக தமிழகம் வருவார். சரித்திரத்தில் இது போன்ற நிகழ்வு நடந்திருக்காது என்பதற்குச் சான்றாக இந்த நிகழ்வு அமைய இருக்கிறது என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் செந்தில்வேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
What's Your Reaction?