தாடி பாலாஜி குறித்த கேள்வி.. பதில் சொல்லாமல் நழுவிய தவெக பொதுச்செயலாளர்
தாடி பாலாஜி வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பதிலளிக்காமல் சென்ற சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புறநகர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதம்பாக்கத்தில் புதிய அலுவலகம் மற்றும் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கலந்து கொண்டு அலுவலகம் மற்றும் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
இந்த நிலையில் விழாவிற்கு வந்த ஆனந்த்தை வரவேற்க தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மேள தாளங்களுடன் காத்திருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பழவேசம், பொதுமக்கள் இடையூறு ஏற்படும் வகையில் நிற்க வேண்டாம் என கூறினார்.
இதற்கு, நாங்கள் யாருக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிற்கவில்லை என தமிழக வெற்றிக் கழகத்தினர் பதிலளித்துள்ளனர். இதனால் போலீசாருக்கும், தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தவெக தலைவர் உத்தரவின் பேரில் ஒன்றிய அரசு கொண்டு வந்து உள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவை கண்டித்து எல்லா மாவட்டங்களிலும் அடையாள ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார். மேலும் அவரிடம் தாடி பாலாஜி குற்றச்சாட்டு, கச்சத்தீவு குறித்து கேட்டதற்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.
சமீபத்தில் நடிகர் தாடி பாலாஜி, தவெக பொதுச்செயலாளர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






