தேசிய கீதத்தை அவமதித்த திமுக எம்.எல்.ஏ! ஆளுநர் செய்த அதே தவறை செய்ததால் சர்ச்சை...
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே, அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அத்தொகுதி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே வெளியேற முயன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படும் முன்னரே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளுநருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தது. தொடர்ந்து அதற்கான விளக்கங்களை ஆளுநர் மாளிகை வெளியிட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து ஆளும் திமுக அமைச்சர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், ஆளுநரைப் போல் திமுக எம்.எல்.ஏவும் தேசிய கீதம் இசைக்கும் முன் வெளியேறிய நிகழ்வு பூந்தமல்லியில் அரங்கேறியுள்ளது.
பூந்தமல்லி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பூந்தமல்லி தொகுதி திமுக எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி பங்கேற்று, மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். அதன் பின்னர் நிகழ்ச்சி முடிந்து தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாகவே அவசர அவசரமாக மேடையில் இருந்து இறங்கிச் சென்று காரில் ஏறிக் கிளம்ப ஆயத்தமானார்.
பின்னர் பள்ளி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியதன் பேரில் மீண்டும் காரில் இருந்து இறங்கி வந்த கிருஷ்ணசாமி தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின் புறப்பட்டு சென்றார். ஆளுநர் தேசிய கீதத்தை அவமதித்தாக அமைச்சர்கள் விமர்சித்து வந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமியின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?