மணல் குவாரி முறைகேடு.. கோர்த்து விட்ட ஆட்சியர்கள்... அமலாக்கத்துறையின் அடுத்த குறி யாருக்கு?

Apr 27, 2024 - 14:08
மணல் குவாரி முறைகேடு.. கோர்த்து விட்ட ஆட்சியர்கள்... அமலாக்கத்துறையின் அடுத்த குறி யாருக்கு?

மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக நீர்வளத்துறை மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் விற்பனை செய்யப்படுவதாகவும், இதன் மூலம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடந்ததாகவும் அமலாக்கத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்த வழக்கில் தஞ்சாவூர், திருச்சி, வேலூர், அரியலூர், கரூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. 
 
தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், மாவட்ட ஆட்சியர்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. தேர்தலுக்கு பிறகு ஏப்ரல் 25-ம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை எனில் ஆட்சியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது. 
 
இதையடுத்து நேற்று முன்தினம் (ஏப்ரல் 25) 5 மாவட்ட ஆட்சியர்களும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் சுமார் 10 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அப்போது,  முறைகேடு நடந்த காலகட்டத்தில் தாங்கள் மாவட்ட ஆட்சியராக இல்லை என 3 பேர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் மணல் குவாரி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்ததாகவும் தெரிகிறது. 

மேலும், மணல் அள்ளப்படுவது தொடர்பாக தங்களின் பணி குறைந்த அளவு தான் எனவும் நீர்வளத்துறை மற்றும் கனிம வளத்துறைக்கே அதிக பணி இருப்பதாகவும் விசாரணையில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த வாக்குமூலத்தை வைத்து அடுத்தக்கட்ட விசாரணையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். மணல் குவாரிகளில் முறைகேடு நடந்த காலகட்டத்தில் 5 மாவட்டங்களிலும் நீர்வளத்துறை மற்றும் கனிம வளத்துறையில் பணியாற்றிய அதிகாரிகளின் பட்டியலை திரட்டி, அதன் அடிப்படையில்  சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow