”பாதிக்கப்படாத சென்னை... வெள்ளை அறிக்கை தேவையா?”  - அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

கனமழை பெய்தபோதும் சென்னை மாநகரில் வெள்ளத்தால் அதிக இடங்கள் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

Oct 17, 2024 - 15:31
”பாதிக்கப்படாத சென்னை... வெள்ளை அறிக்கை தேவையா?”  - அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள முகத்துவாரத்தில்   நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகன், “மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பால் சென்னை மாநகரம் பாதிக்கப்படுவது உண்டு. அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எல்லாத் துறைகளுக்கும் முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அறிவுறுத்தலோடு நிற்காமல் அந்தந்த துறை செய்யக்கூடிய பணிகளுக்கு நிதியையும் முதலமைச்சர் ஒதுக்கினார். இதனால் இந்தாண்டு பெய்த கனமழையால் சென்னை மாநகரில் அதிக இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “சென்னையில் வெள்ள நீர் கடலில் கலக்க வேண்டும் என்றால் மூன்று இடங்கள்தான் இருக்கிறது. ஒன்று கூவம் வழியாகவும், அடையார்  வழியாகவும் எண்ணூர் வழியாகவும் கடலில் கலக்க வேண்டும். முகத்துவாரத்தில் வருடம் முழுவதும் நிரந்தரமாக திறந்திருக்கும். எந்த வெள்ளம் வந்தாலும் பாதிப்பு இல்லாத அளவுக்கு தூண்டில் வளைவு 70 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டதால் மழை வெள்ளம் வடிந்து கொண்டிருக்கிறது” என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். 

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் மழை தடுப்பு பணிக்கு வெள்ளை அறிக்கை கேட்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ”பத்திரிக்கை செய்தியில் கருப்பு மையால் வரும் அறிக்கையே போதும் எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கையா? கூவம் ஆற்றை திமுக சீரமைப்பு செய்து வருவது போன்று அதிமுக செய்ததா? இதுபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளை திமுக செய்துள்ளது” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow