நிலத் தகராறில் மாற்றுத்திறனாளி கொலை... திமுக முன்னாள் எம்.எல்.ஏ விடுவிப்பு..

Feb 26, 2024 - 14:44
Feb 26, 2024 - 14:47
நிலத் தகராறில் மாற்றுத்திறனாளி கொலை... திமுக முன்னாள் எம்.எல்.ஏ விடுவிப்பு..

நிலத்தகராறு தொடர்பாக மாற்றுத்திறனாளி தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட திமுக முன்னாள் எம்.எல்.ஏ.,ரங்கநாதன் உட்பட அனைவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை கொளத்துார் காமராஜ் நகர் அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் மாற்றுத் திறனாளியான புவனேஸ்வரன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், கடந்த 2012 ஜனவரி 10ஆம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நிலத் தகராறு தொடர்பான பிரச்னையில் நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கொளத்துார் காவல்துறையினர், சையது இப்ராகிம், செல்வம், முரளி, குமார் ஆகியோருக்கு எதிராக, விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதனின் துாண்டுதலின்படி தான் தனது மகன் கொலை செய்யப்பட்டதாகவும், ஆனால் குற்றப்பத்திரிகையில் ரங்கநாதனின் பெயரை சேர்க்கவில்லை என்பதால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடக்கோரியும் புவனேஸ்வரனின் தந்தை சிவா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து,  தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன், சையது இப்ராகிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம், பாலசந்திரன் உள்பட 12 பேருக்கு எதிராக, சிறப்பு நீதிமன்றத்தில், சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று(26.02.2024) தீர்ப்பளித்த நீதிபதி கே.ரவி,  நிலத் தகராறு விவகாரத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த மாற்றுத்திறனாளியான புனவேஷ்வரன் கொலை, வழக்கில் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன், உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேர் மீதான குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கவில்லை எனக்கூறி, அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow