பாஜகவுக்கு தாவிய விஜயதரணி.. பறிபோன பொன்முடியின் பதவி..! இரு தொகுதிகளுக்கு தேர்தல் எப்போது?
விளவங்கோடு மற்றும் திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளது குறித்து சட்டப்பேரவை செயலகத்திலிருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை எனத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு விளக்கமளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி விலகி, பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, கட்சித்தாவல் சட்டத்தின் அடிப்படையில் அவரது சட்டமன்ற பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், விஜயதரணியும் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியிருந்தார். அதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். அதேபோல், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோனது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் பணி தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு, மக்களவைத் தேர்தல் பாதுகாப்புக்கு 2 கட்டங்களாக 200 கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழகத்திற்கு வரவுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், விளவங்கோடு மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், அந்த தொகுதிகள் காலியாக உள்ளது தொடர்பாகச் சட்டப்பேரவை செயலாளரிடம் இருந்து எந்த ஆவணமும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதனால் தற்போதைக்கு அங்கு தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லாத நிலையில், சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து ஆவணங்களை பெற்றபின், நாடாளுமன்ற தேர்தலோடு, இரு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
What's Your Reaction?