செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் - ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு எந்தவித தடையும் இல்லை என்று திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடர்ந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.மேலும் இந்த வழக்கில் கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். மேலும் செந்தில் பாலாஜி ஜாமின் கேட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலா ரூ.25 லட்சம் பிணைத்தொகை கொண்ட இரு நபர் உத்தரவாதத்துடன் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று மாலை அல்லது நாளை காலை செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து விடுதலை ஆவார் என கூறப்படுகிறது.
மேலும் செந்தில் பாலாஜி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், வெளிநாடு செல்லக்கூடாது, விசாரணை நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சாட்சிகளை கலைக்கக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு எந்தவித தடையும் இல்லை என்று திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ விளக்கம் அளித்துள்ளார். செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், புழல் சிறைக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் கரூரில் பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
What's Your Reaction?