இரட்டையர் வீட்டில் மூட்டை மூட்டையாக சிக்கிய பொருட்கள்.. அதிர்ந்து போன போலீசார்!

Apr 21, 2024 - 20:31
இரட்டையர் வீட்டில் மூட்டை மூட்டையாக சிக்கிய பொருட்கள்.. அதிர்ந்து போன போலீசார்!

ராமநாதபுரம் அருகே ரூ.50 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை கடத்தியதாக இரட்டையர்களை பிடித்து, வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும், இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள்,  பிரவுன் சுகர் உள்ளிட்டவைகளும் தொடர்ந்து கடத்தப்படும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

கீழக்கரை பகுதியைச் சேர்ந்த முகமது அசாரூதின் மற்றும் முகமது நசுரூதின் என்ற இரட்டையர்கள் அப்பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டி வருகின்றனர். இருவர் மீதும் கஞ்சா வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இது தொடர்பான பிடிவாரண்ட் வழங்குவதற்காக திருப்புல்லாணி சார்பு ஆய்வாளர் கோட்டைச்சாமி அவர்களது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான 700 கிலோ கடல் அட்டைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.  இதையடுத்து அவர், கீழக்கரை சரக வனத்துறை அதிகாரிகளுக்கு கோட்டைச்சாமி தகவல் அளித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்து விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள், வீட்டின் பின்பக்கம் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக இருவரையும் பிடித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow