நடிகர் அஜித்குமார் பிறந்தநாள்.. ரூ.1-க்கு டீ, பிரியாணி.. தேனி ரசிகர் நெகிழ்ச்சி
நடிகர் அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு தேனியில் ரசிகர் ஒருவர் ஒரு ரூபாய்க்கு டீ மற்றும் பிரியாணி வழங்கி அசத்தியுள்ளார்.
தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக இருந்து தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக மாறியவர் நடிகர் அஜித்குமார். திரையில் அவர் நடந்து வருவதைப் பார்க்கவே தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர். இந்த நிலையில் அஜித்குமாரின் 53-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்குவது என ஒரு தலைவனின் பிறந்தநாளை கொண்டாடுவது போல் கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில், தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த காளிதாஸ் என்பவர் அனைவரும் வியக்கும் வகையில் அஜித்குமாரின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். தான் நடத்தி வரும் வீரம் ரெஸ்டாரன்ட் என்ற கடையில் ஒரு ரூபாய்க்கு டீ மற்றும் ஒரு ரூபாய்க்கு பிரியாணியை வழங்கி அசத்தியுள்ளார். அஜித்தின் உருவம் பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டி பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் காளிதாஸ்.
இதற்கும் மேலாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் பல்மருத்துவ சிகிச்சை முகாமையும் நடத்தியுள்ளார் காளிதாஸ். மேலும், பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக இலவசமாக தர்பூசணி பழம் மற்றும் மோர் உள்ளிட்டவைகளும் வழங்கி வருகிறார்.
ரசிகர் மன்றம் வேண்டாம் என நடிகர் அஜித்குமார் கூறினாலும் ரசிகர்கள் காட்டும் அன்பு அவரை இன்னும் உச்சத்திற்கு கொண்டு சென்று கொண்டே இருக்கிறது. அஜித்தின் படங்கள் தாமதமாக வந்தாலும் அவரது நினைவு ஒன்றே நெஞ்சுக்கு இனியது என வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.
What's Your Reaction?