விவசாயிகள் கடுமையான பாதிப்பு : தி.மு.க. அரசு அலட்சியமே காரணம் - எடப்பாடி குற்றச்சாட்டு
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் என்ன என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா? தற்போது விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு தி.மு.க. அரசு தான் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
சட்டப்பேரவை உறுப்பினரானது முதல் தற்போது வரை விவசாயம் செய்து வருகிறேன். விவசாயிகளுக்கு என்றும் ஆதரவாக இருந்தது அதிமுக அரசு; நானும் ஒரு விவசாயிதான்.
பச்சைத் துண்டு அணிந்து விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்று விமர்சிக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். ஆனால், 3 வேளாண் சட்டங்கள் என்ன என்று முதல்வருக்குத் தெரியாது.
காவிரி படுகை மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சித்தவர் ஸ்டாலின். தமிழகத்திலுள்ள விவசாயிகளின் கண்ணீரை அறியாமல் அவர் திரைப்படம் பார்க்கச் செல்கிறார்.நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை. கோரிக்கைகளை நீங்கள் கேட்டு வாங்க வேண்டும். அதைக்கூட எதிர்க்கட்சி தான் செய்கிறது.
முழுக்க முழுக்க அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்கூட்டியே திட்டமிட்டு பயிர்களை அறுவடை செய்திருந்தால், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியிருக்காது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து இறந்தவர்களை வைத்து வாக்குகளைப்பெற திமுக முயற்சிக்கிறது. அவர்கள்தான் ஆளும் கட்சி. சிறப்பு தீவிர திருத்தம் கொண்டுவருவதில் அவர்களுக்கு என்ன பிரச்னை? இவ்வாறு அவர் பேசினார்.
What's Your Reaction?

