தொடர் சரிவை சந்தித்து வரும் தேங்காய் விலை - கவலையில் விவசாயிகள்

Feb 28, 2024 - 17:15
தொடர் சரிவை சந்தித்து வரும் தேங்காய் விலை - கவலையில் விவசாயிகள்

தென்னை கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் தென்னை விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதிகளில் சுமார் 6,000 ஏக்கருக்கும் மேல் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நாட்டு ரக தேங்காய், ஒட்டு வீரிய ரக தேங்காய் வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தேங்காய்க்கான கொள்முதல் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக கடந்த சபரிமலை சீசன் முடிவடைந்ததும் தேங்காய் அதன் தரத்தை பொறுத்து டன் ஒன்றுக்கு ரூ.24,500 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால்  தற்போது ரூ.23,000 வரை மட்டுமே டன் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பெரும் ஏமாற்றத்தை  சந்தித்து வருகின்றனர்

சில்லறை முறையில் நாட்டு ரக தேங்காய் சிறியது ஒன்றுக்கு ரூ.8 வரையிலும், முதல் தர தேங்காய் ரூ.11 முதல் ரூ.12 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. அதிலும் எண்ணிக்கை கணக்கில் இல்லாமல் எடைக்கணக்கில் கொள்முதல் செய்யப்படுவதால், வெட்டுக்கூலி, தேங்காய் உரிப்பு கூலி அனைத்தும் விவசாயிகளையும் குத்தகைதாரர்களையும் சார்ந்துள்ளது. இந்நிலையில், தற்போது கொடுக்கப்படும் கூலியின் அளவிற்கு கூட கொள்முதல் செய்யப்படும் தேங்காயில் லாபம் ஈட்ட முடியவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இதனால் பெரும்பாலும் தேங்காய் விற்பனை செய்யப்படாமல் எண்ணெய் உற்பத்திக்காக கொப்பரை தேங்காயாக காய வைக்கப்படுகிறது. ஏற்கனவே விவசாய நிலங்கள் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்படும் நிலையில்,  இதே நிலை நீடித்தால் போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தென்னை மர தோப்புகள் எல்லாம் விரைவில் ரியல் எஸ்டேட்டாக மாறி தென்னை விவசாயம் அழியும் நிலை ஏற்படும் என்று வேதனை தெரிவிக்கும் தென்னை விவசாயிகள், தேங்காய்க்கான கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow