தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக அளவில் நடவடிக்கை - ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
கைது செய்யப்பட்ட மீனவர்களின் வாழ்வாதார பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிடவும் கோரியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை கடற்படையினரால், கடந்த 9 மற்றும் 13ம் தேதிகளில் கைது செய்யப்பட்ட 31 தமிழக மீனவர்களை விடுவிக்க, தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து 1974ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், பாக்- ஜலசந்தியில் இரு நாட்டு மீனவர்களுக்கு மீன்பிடிக்க பாரம்பரிய உரிமை உள்ளதாகக் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, பாக்- ஜலசந்தியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாகவும், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1983 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் 111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், 439 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தற்போது சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவு அமைச்சகத்துக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், கைது செய்யப்பட்ட மீனவர்களின் வாழ்வாதார பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிடவும் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மீனவர்கள் விடுதலைக்காக தூதரக அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பிலும், உரிய நிவாரணம் வழங்கப்படும் என மாநில அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
What's Your Reaction?