குழந்தைகளுக்கும், கோவில்களுக்கும்.. பட்ஜெட்டில் வாரி வழங்கப்பட்ட நிதி..! இத்தனை கோடிகள் ஒதுக்கீடா?
மதுரை திருமங்கலம், ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ.11,368 கோடிக்கான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ. 3,123 கோடி ஒதுக்கப்படுவதாகவும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு ரூ.200 கோடியில் புதிய திறன் பயிற்சிக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையில் 440 கோடி ரூபாயும், அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.200 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ரூ.843 கோடி, சுகாதார மையங்கள் முதல் மருத்துவக்கல்லூரிகள் வரை கட்டமைப்புகளை தரம் உயர்த்த ரூ.333 கோடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு மொத்தமாக ரூ.20,198 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரியவகை உயிரினங்களைப் பாதுகாக்க ரூ.50 கோடி ஒதுக்கப்படுவதாகவும், கடலோர வளங்களை மீட்டெடுக்க ரூ.1,675 கோடியில் நெய்தல் மீட்சி இயக்கம் உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலையில் வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.10,740 கோடியில் திட்ட அறிக்கை உள்ளதாகக் கூறிய அமைச்சர், மதுரை திருமங்கலம், ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ.11,368 கோடிக்கான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பதற்கான ரூ.4,625 கோடிக்கான திட்ட அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறைக்கு மொத்தமாக ரூ.1,429 கோடியும், 1000 ஆண்டு பழமை வாய்ந்த கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெருநாய் தொல்லைகளைத் தடுக்க, ரூ.20 கோடியில் இனப்பெருக்க தடுப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் ரூ.60 கோடி மதிப்பில் ஆவினுக்கு நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் தானியங்கி இயந்திரங்கள் வாங்கப்படும் எனவும் அவர் கூறினார். புராதான கட்டடங்களைப் பழமை மாறாமல் புதுப்பிக்க நடப்பாண்டில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார்.
What's Your Reaction?