திருப்பூரில் எதிரொலித்த டெல்லி போராட்டம்… தமிழக விவசாயிகள் ஆதரவு…
டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்தும் திருப்பூரில் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் இளைஞர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கும் சட்டம், விவசாய கடன் தள்ளுபடி, மின்சார சட்ட திருத்த மசோதா ரத்து உட்பட பல்வேறு கோரிக்கைகளை இயற்ற வலியுறுத்தி, பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'தி சம்யுக்தா கிசான்மோர்சா, தி கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 37 விவசாயிகள் சங்கங்தினர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தலைநகருக்குள் விவசாயிகளை நுழையவிடாமல் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தடுப்புகள் மற்றும் முள்வேலிகளை வைத்து தடுத்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தை கலைக்க முயன்றனர். இதனிடையே, சம்பு எல்லையில் போராட்ட களத்தில் இருந்த 63 வயது விவசாயியான கியான் சிங் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது அரசின் ஒடுக்குமுறையை கண்டித்தும் திருப்பூர் ரயில் நிலையம் முன் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் சங்கத்தினர், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும், திருப்பூர் வரும் பிரதமர் இதுகுறித்த நல்ல அறிவிப்பை வெளியிடாத பட்சத்தில் மாபெரும் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
What's Your Reaction?