இலவச வீட்டுமனை எப்போ தருவீங்க..? கோட்டாட்சியரை முற்றுகையிட்ட மக்கள்!
 
                                தேனியில் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்று கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம், தென்கரை, கைலாசப்பட்டி, தெ.கள்ளிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல காலமாக இவர்கள் வாடகை வீட்டில் வாழ்ந்துவரும் நிலையில், இலவச வீட்டு மனை வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்.
ஆனால், 4 ஆண்டுகள் ஆகியும் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், காத்திருந்து விரக்தியடைந்த மக்கள், பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, கோட்டாட்சியர் வீட்டு மனை கேட்டு வந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அரசு தரிசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            