Pasi Durai: தமிழ்த் திரையுலகில் அடுத்த அதிர்ச்சி… ‘பசி’ இயக்குநர் துரை காலமானார்!

பசி உட்பட 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் துரை. தமிழ் சினிமாவில் பழம்பெரும் இயக்குநரான துரை உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

Apr 22, 2024 - 15:09
Apr 22, 2024 - 17:03
Pasi Durai: தமிழ்த் திரையுலகில் அடுத்த அதிர்ச்சி… ‘பசி’ இயக்குநர் துரை காலமானார்!

சென்னை: ஸ்ரீதர், பாலச்சந்தர் வரிசையில் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் ‘பசி’ துரை. மூத்த கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என மாற்று சினிமாவின் களஞ்சியமாக வலம் வந்தார். விளிம்பு நிலை மக்களின் யதார்த்தமான வாழ்வியலை தனது படங்களின் வழியே மக்களிடம் கொண்டு சேர்த்ததில் இயக்குநர் துரையின் பங்கு மிக முக்கியமானது. துரை இயக்கிய பசி திரைப்படம் 3 தேசிய விருதுகளை வென்றதன் மூலம் ரொம்பவே பிரபலமானார். 1979ல் ரிலீஸான இந்தப் படத்தில் ஷோபா, விஜயன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  

இயக்குநர் துரை தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் 46 படங்கள் இயக்கியுள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருந்தார் இயக்குநர் துரை. ஆனால் இன்று அவர் உயிரிழந்துவிட்டதாக துரையின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர், அவருக்கு வயது 84. இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் ஒரு மகள்களும் உள்ளனர். இதனையடுத்து துரையின் உடல் சென்னை திருவள்ளூரில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  

இயக்குநர் துரையின் மறைவு பற்றிய செய்தியறிந்த ரசிகர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட துரை சின்ன வயது முதலே சினிமா மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் மொழிகளை கடந்து நடிகர் கல்யான்குமார் உதவியுடன் கன்னட சினிமாவில் அறிமுகமான துரை, பின்னர் தமிழிலும் முன்னணி இயக்குநராக வலம் வந்தார். அவளும் பெண் தானே, ஆயிரம் ஜென்மங்கள், நீயா, கிளிஞ்சல்கள் ஆகியவை துரை இயக்கிய படங்களில் குறிப்பிடத்தக்கவை.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow